பூஜையுடன் தொடங்கிய தளபதி67.. தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் சம்பவம் லோடிங்!
மாநகரம், கைதி போன்ற வெற்றி திரைப்படங்களை தந்து திரையுலகை தன் வசம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, இவருக்கு விஜய் வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய், மாளவிகா மோஹனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து, இவர் இயக்கத்தில், கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரம் படத்தை உருவாக்கி இருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தில் கைதி படத்தின் கனெக்ஷன் வைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார் லோகேஷ் கனகராஜ். திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.
தளபதி விஜய் நடிப்பில் இந்த வருடம் வெளியான பீஸ்ட் திரைப்படம் சரியான வரவேற்பை பெறாத காரணத்தினால், விஜய்யின் வாரிசு திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக காத்திருக்கின்றனர். வசூலிலும் விமர்சன ரீதியிலும் ரசிகர்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத காரணத்தினால், வாரிசு படத்திற்கு எதிர்பார்ப்பு சற்று கூடியுள்ளது.
வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடிக்கவிருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் குறித்தும், கதை குறித்தும் பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளன.
படத்தின் அப்டேட் இதுவரை வெளியாகாத நிலையில், இன்று பூஜையுடன் படம் துவங்கப்படவுள்ளதாகவும் இதன் அறிவிப்பு நிச்சயம் வெளியாகும் என சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை இல்லாத நிலையில், ட்விட்டரில் தளபதி67, லோகேஷ் கனகராஜ் பெயர்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.