பாலாவின் 'வணங்கான்' படத்திலிருந்து விலகிய சூர்யா.. காரணம் குறித்து பாலா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் என 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்த சூர்யா, தற்போது இவர்கள் கூட்டணியில் 3வது முறையாக இணைந்த திரைப்படம் ‘வணங்கான்’. 2டி நிறுவனம் சார்பாக சூர்யா, ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யா, கீர்த்தி ஷெட்டி நடிப்பதாகவும், ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாகவும் அறிவித்தனர்.
மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில மாதங்கள் கன்னியாகுமரியில் நடைபெற்றது. திருவள்ளுவர் சிலை முன் சூர்யா நிற்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.
இந்நிலையில், படப்பிடிப்பின் போது பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக நடிகர் சூர்யா படப்பிடிப்பில் இருந்து பாதியிலேயே வெளியேறியதாகவும் தகவல் வெளியாகி செம வைரல் ஆனது.
பின்னர், திரைப்படத்தின் எந்த விதமான அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. இதனால் திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் பாலா அதிர்ச்சியான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என பயமாக இருப்பதாகவும், இதனால் சூர்யாவும் பாலாவும் இணைந்து முடிவெடுத்து ‘வணங்கான்’ திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதில் மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது எனவும் சொல்லப்பட்டுள்ளது.
விரைவில் அடுத்த கதையில் இணைவதாகவும், இருப்பினும், மற்றபடி, வணங்கான் படப்பணிகள் தொடரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதனால், சூர்யாவிற்கு பதிலாக வேறு நடிகர் கதாநாயகனாக நடிப்பார் என கூறப்படுகிறது.