OTTயில் வெளியாகும் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் 19(1)(a).. எதிர்பார்ப்பை கூட்டும் டீசர் வீடியோ!
பெரிய பிரபலங்கள் படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர், பீஸ்சா, நானும் ரவுடி தான், இமைக்கா நொடிகள் போன்ற பல திரைப்படங்களில் மக்களை ஈர்க்கும் கதையில் பிடித்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆகி, தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மக்கள் செல்வனாக உருவாகியுள்ளார்.
எந்த விதமான கதைகளிலும் தயக்கம் காட்டாது நடித்து வரும் விஜய் சேதுபதி, இவர் நடிக்கும் முக்கால்வாசி திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்து விடுகிறது. தற்போது, 2 ஹீரோ சப்ஜெக்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர்,மேலும், தற்போது வெளியாகி வேற லெவல் மாஸ் காட்டி வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து கெத்து காட்டி வருகிறார்.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் 2 பெரிய ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் சந்தானம் என்ற போதை கடத்தல் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. தற்போது, சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது, ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்திய திரையுலகில் பிரம்மிக்க வைக்கும் கலைஞனாக உருவெடுத்திருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் மலையாள மொழியில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 19(1)(a).
விஜய் சேதுபதி நடிப்பில் மலையாளத்தில் 2019ம் ஆண்டு ‘மார்கோனி மத்தாய்’ என்ற திரைப்படம் வெளியான நிலையில், நீண்ட இடைவெளிக்கு மலையாளத்தில், இவர் நடித்துள்ள திரைப்படம் 19(1)(a). இந்த படத்தின் டீசர் நேற்று, டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. எனவே இப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாவது உறுதியாகியுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சேதுபதி எழுத்தாளராக நடித்திருக்கும் இந்த படத்தில், நித்யா மேனன் டெலிபோன் பூத் மற்றும் ஜெராக்ஸ் கடையில் வேலை செய்பவராக நடித்துள்ளார். மேலும் இந்திரஜித் சுகுமாரன் மற்றும் இந்திரன்ஸ் ஆகியோர் துணை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்திய அரசியலமைப்பில் உள்ள 19(1)(a) என்கிற பிரிவு இந்த படத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது. இப்படம் கருத்து சுதந்திரம் பற்றி பேச உள்ளதாக தெரிகிறது .
இப்படத்தை இந்து VS எழுதி இயக்கியுள்ளார். ஆன்டோ ஜோசப் மற்றும் நீதா பின்டோ ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, மனேஷ் மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழை தொடர்ந்து பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் மலையாள திரையுலகிலும் நிரந்தர இடத்தை பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.