தன் பாலின ஈர்ப்புக் கொண்டவராக நடித்துள்ள முன்னணி நடிகர்.. குவியும் பாராட்டு மழை..!
இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் காதல் தி கோர்(Kadhal The Core). ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் பால்சன் சகாரியா திரைக்கதை எழுதியுள்ளனர். நடிகர் மம்மூட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
வங்கி ஊழியராக பணியாற்றி ஓய்வுபெற்ற மேத்யூ (மம்மூட்டி), மனைவி ஓமனா (ஜோதிகா), மகள் ஃபெமி மற்றும் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் பெற்ற மேத்யூ தனது ஊரில் நடக்கும் இடைத்தேர்தலில் நிற்க வைக்க முடிவு செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக, அவரது மனைவி ஓமனா அவரிடம் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தது அனைவர் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.
தன்னுடைய கணவன் தன் பாலின ஈர்ப்புக் கொண்டவர் என்பதை மறைத்து 20 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்தி தன்னை ஏமாற்றியுள்ளதாக குற்றம் சாட்டுகிறார் ஓமனா. தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யாக வைக்கப்பட்டவை என்று வாதாடுகிறார் மேத்யூ. பல எதிர்ப்புகளையும் கடந்து ஓமனா இந்த விவாகரத்தை பெறுவதில் ஏன் இவ்வளவு முனைப்பு காட்டுகிறார்? என்பதே காதல் தி கோர் படத்தின் கதை.
தன் பாலின ஈர்ப்புக் கொண்ட முக்கால் சதவீதம் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களுக்கு விருப்பம் இல்லாத ஒருவரை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வருவதாக இருக்கும் இந்த சமுதாயம் சார்ந்த ஒரு பிரதிபலிப்பாக இந்த படம் அமைந்துள்ளது. இதில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஒரு நடிகர், இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது பெரும் வரவேற்புக்குள்ளானதாக பார்க்கப்படுகிறது.