‘லவ் டுடே’ சீனை விழிப்புணர்வுக்காக பயன்படுத்திய போலீஸ்.. வைரலாகும் மீம்!
2019ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. பள்ளி கூடத்தில் படிக்கும் போது எதிர்பாராத விபத்தில் சிக்கி கோமா வரை சென்று தனது வாழ்க்கையில் 16 வருடம் கோமாவில் இருந்து வெளியேறும் மனிதனுக்கு இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதனை சுவாரசியமாக சொல்லியிருப்பார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் திரைப்படமான கோமாளி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 76 கோடி வரை வசூல் செய்திருந்தது. தற்போது பிரதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.
சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்துள்ளனர். நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாது இந்த காலத்து காதலை பிரதிபலிப்பதாக கூறியுள்ளனர்.
காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் போனை மாற்றிக்கொண்ட பின் நடக்கும் மோதல்களை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ள படம் தான் லவ் டுடே. முதல் பாதி முழுக்க காமெடி, இரண்டாம் பாதி முழுக்க எமோஷன் என பக்கா கமர்சியல் பேக்கேஜ் ஆக இப்படத்தை இயக்கியுள்ளார் பிரதீப். இன்றைய கால இளைஞர்களின் வாழ்வோடு ஒத்துபோகக்கூடிய கதை என்பதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, லவ் டுடே படத்தின் காட்சி ஒன்றை தஞ்சாவூர் போலீசார் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தியுள்ள சம்பவமும் அரங்கேறி உள்ளது. மீம்ஸ் மூலம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. அந்த வகையில், லவ் டுடே படத்தின் ஒரு காட்சியில் நாயகன் பிரதீப்பிடம் காதலியாக நடித்துள்ள நடிகை இவானா, தனக்கு ஆன்லைனின் நிறைய ஆபாச மெசேஜ் வருவதாக கூறுவார். இதற்கு பிரதீப், பிளாக் பண்ணிடு, நமக்கெல்லாம் சைபர் புகார் எப்படி கொடுக்கணும்னு கூட தெரியாது என கூறி இருப்பார்.
இந்த காட்சியை அப்படியே பயன்படுத்தி, அதான் 1930 என்கிற எண்ணிற்கு கால் பண்ணினால் உடனே சைபர் போலீஸில் புகார் கொடுக்கலாமே என மீம் ஒன்றை உருவாக்கி அதனை தஞ்சாவூர் போலீஸின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து நெகிழ்ந்துபோன இயக்குனர் பிரதீப் அதனை ஷேர் செய்து, இது எனது நாளை இனிமையாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
Made my day . https://t.co/CdcI2qwbPS
— Pradeep Ranganathan (@pradeeponelife) November 9, 2022