'என் மகனுக்கு நான் தமிழில் நடித்த இந்த படத்தை தான் முதலில் காட்டுவேன்' - காஜல் அகர்வால் பேட்டி வைரல்..!
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மொழியில், துப்பாக்கி, மாற்றான், விஸ்வாசம், மாரி 1 போன்ற படங்களில் விஜய், அஜித், தனுஷ், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய அனைத்து மொழிகளிலும் நடித்துள்ள காஜல், தெலுங்கிலும் டாப் நடிகையாக வலம் வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு இறுதியில் கவுதம் கிச்சிலு என்கிற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால், கடந்தாண்டு கர்ப்பமானார்.
தனது பேபி பம்ப் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த காஜல், போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். பின்னர், நடிகை காஜல் அகர்வால் - கவுதம் கிச்சிலு தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அடுத்த நாளே, கவுதம், குழந்தைக்கு நீல் கிச்சிலு (Neil kitchlu) என பெயரிட்டுள்ளதாக அறிவித்தார். இந்த செய்தி அறிந்ததும் சமூக வலைதளங்களில் வைரலாகி வாழ்த்துக்கள் குவிந்தன.
தனது மகனுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை அவ்வப்போது அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார். மேலும், தற்போது, அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வரும் காஜல், இந்தியன் 2 படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய மகன் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ‘என் மகனுக்கு 8 வயது ஆகும் வரை எந்த ஒரு படத்தையும் அவனுக்கு காட்டப்போவதில்லை. 8 வயது ஆன பிறகு முதன் முதலில் அவனுக்கு நான் நடித்த ‘துப்பாக்கி’ படத்தை தான் காட்டுவேன்’ என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.