எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய பஹத் பாசில்.. தீயாக ட்ரெண்டாகும் போட்டோ பதிவு..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பஹத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாமன்னன். ஜாதி பாகுபாடு குறித்தும், தற்போது நடைமுறையில் உள்ள சில விஷயங்களை வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், சமீபத்தில் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தியேட்டரில் வெளியான விமர்சனங்களை விட தற்போது ஓடிடி ரிலீஸில் நடக்கும் விஷயம் அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. ஜாதி வெறி அதிகம் கொண்ட வில்லனாக படத்தில் காட்டப்பட்ட ரத்னவேலு கதாபாத்திரத்தை (பஹத் பாசில்) நெட்டிசன்களும், மீம்ஸ் க்ரியேட்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.
படத்தில் வரும் அவரது காட்சிகளை எடுத்து ஜாதி பெருமை பேசும் பாடல்கள் இணைத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இன்னும் மேலாக, அவர் எங்க ஜாதி என பல பிரிவினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
இதனை சிலர் எதிர்த்து விமர்சனங்களும், கருத்துகளும் தெரிவித்து வருகின்றனர். இந்த நேரத்தில், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் பஹத் பாசில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரத்னவேலு கதாபாத்திரத்தின் முக்கிய 3 போட்டோக்களை இணைத்து தனது பேஸ்புக் பக்கத்தின் கவர் புகைப்படமாக மாற்றியுள்ளார்.