பிக்பாஸ் கவினுக்கு டும் டும் டும்.. மணப்பெண் மற்றும் திருமண தேதி குறித்த விவரம் இதோ..!
விஜய் டிவியில் ‘கனாக் காணும் காலங்கள்’ சீரியல் மூலம் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகர் கவின். 2011ம் ஆண்டு தனது சின்னத்திரை பயணத்தை துவங்கிய கவினுக்கு, ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தொகுப்பாளராக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ள கவின், சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கினார். அந்த வகையில், கவின் முதன்முதலாக ஹீரோவாக நடித்த திரைப்படம் ‘நட்புன்னா என்னனு தெரியுமா’. இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
பின்னர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கவின் களமிறங்கினார். ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும், பின்னர் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து ரசிகர்கள் ஆதரவையும் பெறத் துவங்கினார். பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளரான லாஸ்லியாவுடன் காதலில் விழுந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் லாஸ்லியா, கவின் இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்க துவங்கினர். கவின், நேர்த்தியான கதைகளை தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான லிப்ட் மற்றும் டாடா ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது கவின் கைவசம் இரண்டு புதிய படங்கள் உள்ளன. இந்நிலையில், தற்போது கவின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கவினுக்கு ஆகஸ்ட் 20ம் தேதி, பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணுடன் திருமணம் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.