ஸ்கூல் படிக்கும்போது பிரபல நடிகருடன் திருமணம்.. 2 முறை விவாகரத்து.. பிரபல நடிகை சரிதாவின் யாரும் அறியா வாழ்க்கை பக்கங்கள்..!

1980களில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் நடிகை சரிதா. தமிழில் தப்புத் தாளங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து பிரபல நடிகர்களின் படங்களில் நடித்தார். இவரது நடிப்பிற்காக பல உயரிய விருதுகளையும் பெற்றார்.
திரையுலகில் டாப் நடிகையாக வலம் வந்த சரிதாவின் சொந்த வாழ்க்கையில் பல்வேறு சோகங்கள் இருந்தது குறித்து பலரும் அறிந்திருக்க முடியாது. 1960-ல் குண்டூர் அருகே ஒரு கிராமத்தில் பிறந்தவர் சரிதா. தனது 15 வயதில் பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்னரே இவர் தனது முதல் படத்தில் கமிட் ஆனார். கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக அறிமுகமானவர் சரிதா.
சரிதா நடித்த முதல் படமான மரோ சரித்ரா 1978ம் ஆண்டு ரிலீசாகி ஹிட் அடித்தது. பின்னர் அதே ஆண்டில் தமிழிலும் ரஜினியின் தப்பு தாளங்கள் படம் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்த சரிதா, தன்னுடைய நடிப்பு திறமையால் பாராட்டுக்களை அள்ளினார். இப்படி அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்த இவர், 16 வயதில் வெங்கட சுப்பையா என்னும் தெலுங்கு நடிகரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு பின் நடிக்கக் கூடாது என கண்டிஷன் போட்டதால் பிரச்சனை ஏற்பட்டு ஆறு மாதத்திலேயே அவரை சரிதா பிரிந்துவிட்டார். பின்னர், மீண்டும் நடிக்கத் தொடங்கி ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர், மலையாள நடிகர் முகேஷுடன் தொடர்ந்து சில படங்களில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடந்த 1988ம் ஆண்டு முகேஷை 2வது திருமணம் செய்துகொண்டார்.
முகேஷை திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவில் இருந்து விலகிய சரிதா, பின்னர் பிரெண்ட்ஸ், ஜூலி கணபதி, ஜூன் ஆர் உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்து வந்தார். இதையடுத்து கடந்த 2011ம் ஆண்டு முகேஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து சரிதா பிரிந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விவாகரத்திற்கு பின்னர் வெளிநாட்டில் மகன்களுடன் செட்டிலாகினார்.
அதன்பின்னர் சினிமா பக்கம் தலைகாட்டாமலே இருந்து வந்த சரிதா, தற்போது மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்து தரமான கம்பேக் கொடுத்துள்ளார். இனி அம்மா ரோல்களில் நடித்து திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.