'கிரிஞ்ச் அட்வைஸ்.. அரசியல் பஞ்ச்.. ரீ-ரிலீஸிலும் படுதோல்வி..' என பாபா படத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்.. கடுப்பான ரஜினி ரசிகர்கள்
2002ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் 4வது முறையாக இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார்.
மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணிபுரிந்தனர்.
மகா அவதார் பாபாஜியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான சமயத்தில், பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி அடிக்கடி காட்டும் அந்த பாபா முத்திரை, படம் வெளியான சமயத்தில் குழந்தைகளையும் வசீகரித்து, இப்போதுவரை அவருக்கான ஒரு தனி அடையாளமாகவே கருதப்படுகிறது.
பாபா படம் தோல்வியடைந்தாலும், அது இன்று வரை ரஜினியின் மனதுக்கு நெருக்கமான படமாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக பாபா படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி, கிளைமாக்ஸ் உள்பட சில காட்சிகளை மாற்றியமைத்து ரஜினியின் பிறந்தநாளையொட்டி கடந்த வாரம் 20 ஆண்டுகளுக்கு பின் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்தனர். இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினாலும், பொதுமக்கள் இப்படத்தை எதிர்பார்த்த அளவு கொண்டாடவில்லை.
இந்நிலையில், பாபா படம் ரீ-ரிலீஸிலும் படுதோல்வி அடைந்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். சினிமா விமர்சகர் என்ற பெயரில் டாப் நடிகர்கள், இயக்குனர்கள் என அவர்கள் பணியாற்றும் திரைப்படங்கள், செயல்கள் அனைத்தையும் வம்பிழுப்பத்து சர்ச்சை கிளப்பி வருபவர் ப்ளூ சட்டை மாறன். டாப் நடிகர்கள் நடித்த படம் முதல் லோ பட்ஜெட் திரைப்படங்கள் வரை அனைத்தையும் விமர்சித்து வீடியோ பதிவிட்டு ட்ரெண்ட் ஆவது இவரது வழக்கம்.
இளம் தலைமுறையினர் இப்படத்தை ரிஜெக்ட் செய்துவிட்டார்கள். ரஜினியின் தனிப்பட்ட நம்பிக்கை, கிரிஞ்சான அட்வைஸ் மற்றும் காமெடியான அரசியல் பஞ்ச் வசனங்கள் அடங்கிய இப்படத்தை யாரும் பார்க்க விரும்பவில்லை என கடுமையாக சாடி உள்ளார். இதைப்பார்த்து கடுப்பான ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை திட்டித்தீர்த்து வருகின்றனர்.