தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் தமிழ் பிக்பாஸ் பிரபலம்.. ஹீரோயின் இவங்க தானாம் !
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வீரருமானவர் எம்.எஸ்.தோனி. இவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கப்பட்டதில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் நடித்திருந்தார். கிரிக்கெட் வீரராக இருந்தாலும், இவரது கிரிக்கெட் ஸ்டைலுக்கும், நற்குணத்திற்கும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், தோனி தனி தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார்.
அதிலும், அவர் தயாரிக்க போகும் முதல் படமே தமிழ் படம் தான். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திடம் முக்கிய உதவியாளராக இருந்த சஞ்சய் என்பவர் எம்.எஸ்.தோனியின் தயாரிப்பு நிறுவனத்தில் இணைந்துள்ளார். அவர் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பில் எம்.எஸ்.தோனி ஈடுபட இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான ‘ரோர் ஆஃப் தி லயன்’ எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. ‘ வுமன்’ஸ் டே அவுட் ‘ என்ற பெயரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கிறது.
தற்போது, தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்க உள்ள முதல் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு தோனியின் மனைவி சாக்ஷி தான் கதை எழுதி உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த அறிவிப்பில் இப்படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், தற்போது தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.