'சில ‘நாய்’யால சீக்காளி ஆனேன்' இயக்குனர் ஷங்கரை தாக்கி பாடினாரா வடிவேலு? சர்ச்சையை கிளப்பிய அப்பத்தா பாடல்
மதுரையில் பிறந்து வளர்ந்த நடிகர் வடிவேலு, மேடை நிகழ்ச்சிகளில் நகைச்சுவையாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்து திரையுலகில் அடியெடுத்து வைத்தவர். 1988ம் ஆண்டு, டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான என் தங்கை கல்யாணி என்னும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்காரவேலன், தேவர் மகன், காதலன், காலம் மாறி போச்சு போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர், வைகை புயலாக அவதாரம் எடுத்த இவர், தொடர்ந்து நம்பர் 1 காமெடி நடிகராக தமிழ் திரையுலகில் வலம் வந்தார். டாப் நடிகர்கள் படத்தில் நடித்ததாதோடு, இவரே நடிகராகவும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடித்துவிட்டு பாதியிலேயே வெளியேறியதன் காரணமாக இயக்குனர் ஷங்கர் அவர் மீது புகார் கொடுத்திருந்தார். ஷங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்த ரெட் கார்டு பிரச்சனை முடிவுக்கு வந்ததையடுத்து மீண்டும் சினிமாவில் பிசியாகிவிட்டார் வடிவேலு. தற்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார்.
சுராஜ் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அப்பத்தா என பெயரிடப்பட்டு உள்ள அப்பாடலை வடிவேலு தான் பாடி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்த இப்பாடலுக்கு அசல் கோளார் பாடல் வரிகளை எழுதி இருந்தார். இப்பாடலுக்கு நடன இயக்குனர் பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார்.
வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருந்த இப்பாடல் யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இப்பாடல் வரிகள் சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதன்படி இதில் இடம்பெறும் “நான் உண்டு என் வேலை உண்டுனு இருந்தேன்.. சில ‘நாய்’யால நான் சீக்காளி ஆனேன்” என்கிற வரிகள் தான் இந்த சர்ச்சைக்கு காரணம். இயக்குனர் ஷங்கர் உடனான பிரச்சனையால் தான் அவர் நடிக்க முடியாமல் போனது என்பது ஊருக்கே தெரியும். அப்படி இருக்கையில் அவரை வம்பிழுக்கும் வகையில் தான் இப்படி ஒரு வரியை அப்பாடலில் வைத்துள்ளதாக நெட்டிசன்கள் சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர்.