விரைவில் ‘சிங்கம் 4’? ஹரி இயக்கத்தில் மீண்டும் போலீசாக சூர்யா.. இது யாருமே எதிர்பாக்கலயே!
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை தனக்கென்று வகித்து வருபவர் நடிகர் சூர்யா. ஆரம்ப காலத்தில் பெரிய படங்கள் ஏதும் ஹிட் ஆகாத நிலையில், பிதாமகன், நந்தா, மௌனம் பேசியதே, 7ம் அறிவு போன்ற படங்கள் மூலம் செம பிரபலம் ஆனார். மேலும், இவரது நற்குணங்கள் காரணமாக மக்கள் இடையில் இவருக்கு நல்ல பெயரும் உள்ளது.
சமீபத்தில், இவர் நடித்த விக்ரம் மற்றும் ராக்கெட்ரி போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், சுதா கொங்கரா படம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைய உள்ள படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், சூர்யா 42 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது.
நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனர்கள் பாலாவும், ஹரியும் தான். இதில் ஹரி இயக்கத்தில் அதிக படங்களில் சூர்யா நடித்துள்ளார். ஆறு, வேல் மற்றும் சிங்கம் படத்தின் 3 பாகங்கள் என மொத்தம் 5 படங்களில் நடித்திருக்கிறார் சூர்யா. இந்த 5 படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட். அதிலும் குறிப்பாக சூர்யாவை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய படம் என்றால் அது சிங்கம் தான்.
சூர்யா - ஹரி கூட்டணியில் 2010ம் ஆண்டு வெளியான சிங்கம் -1 பட்டிதொட்டியெங்கும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து 2013ம் ஆண்டு சிங்கம் 2ம் பாகம் வெளியானது. முதல் பாகத்தைப்போல் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் அந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனை படைத்தது. இதையடுத்து 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் 2017ம் ஆண்டு சிங்கம் 3ம் பாகம் ரிலீசானது.
இப்படத்தின் வெற்றிக்கு பின் அருவா படத்திற்காக சூர்யாவும், ஹரியும் இணைந்து பணியாற்ற உள்ளதாக 2020ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக அப்படத்தை கைவிட்டு விட்டனர். இந்நிலையில், சூர்யா - ஹரி கூட்டணி தற்போது 5 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஹரி தற்போது சிங்கம் படத்தின் 4ம் பாகத்திற்கான கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளாராம். தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு சூர்யா சிங்கம் படத்தின் 4ம் பாகத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.