தளபதி 67ல் ரோலெக்ஸ்.. லோகேஷ் யூனிவெர்ஸ்'ல் இணைய போகும் விஜய் - சூர்யா !
மாநகரம், கைதி போன்ற வெற்றி திரைப்படங்களை தந்து திரையுலகை தன் வசம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனைத் தொடர்ந்து, இவருக்கு விஜய் வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய், மாளவிகா மோஹனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து, இவர் இயக்கத்தில், கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் விக்ரம் படத்தை உருவாக்கி இருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தில் கைதி படத்தின் கனெக்ஷன் வைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார் லோகேஷ் கனகராஜ். திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது.
விஜய் தற்போது நடித்து வரும் வாரிசு படத்தை தொடர்ந்து, விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணியில் முழுவீச்சில் இறங்கி உள்ளார். இப்படத்தில் அவருடன் இயக்குனர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வட்டி ஆகியோரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
தளபதி 67 கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக மலையாள நடிகர் பிருத்விராஜ், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது.
இந்நிலையில், தற்போது இப்படத்தில் மெயின் வில்லனாக நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இப்படத்தையும் தனது LCUவின் கீழ் எடுக்க லோகேஷ் முடிவு செய்துள்ளதாகவும், அதனால் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரமும் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
விக்ரம் படத்தில் சூர்யா ரோலெக்ஸாக நடித்த 5 நிமிட காட்சிக்கே அரங்கம் அதிர்ந்த நிலையில், தற்போது விஜய்க்கு வில்லனாக அவர் நடிக்க உள்ளதாக பரவும் தகவல் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விஜய்யும் சூர்யாவும் ஏற்கனவே நேருக்கு நேர், பிரெண்ட்ஸ் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.