ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த உலகநாயகனின் படம் டிராப்? அட கடவுளே!
களத்தூர் கண்ணம்மா என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் நம் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது, நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், அரசியல் என பல பரிமாணங்கள் கொண்டு பிரபலமாக விளங்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனக்கென்ற இடத்தை நிலைநாட்டியவர். தேசிய விருது, கலைமாமணி, விஜய் விருது என பல விருதுகளை குவித்தவர்.
4 வருடங்களுக்கு பிறகு, இவரது நடிப்பில் கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் விக்ரம். 350 கோடிகளை கடந்து வசூல் பெற்றது.
இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து, எச். வினோத் இயக்கத்தில் KH233 மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் KH234 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.
இதுதவிர பா.இரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோரும் கமலுக்கு கதை சொல்லி ஓகே வாங்கி உள்ளனர். இதனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கமல் செம்ம பிசி. இந்நிலையில், மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரம் படத்துக்கு முன்னரே இந்த கூட்டணி குறித்து அரசல் புரசலாக பேச்சு அடிபட்டது. இது தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் இப்படத்திற்கு கமல் திரைக்கதை அமைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த படத்துக்காக இயக்குனர் மகேஷ் நாராயணன் 2 ஆண்டுகளாக காத்திருந்த நிலையில், தற்போது அப்படம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.