சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்பில் சேர வேண்டாம் - யுஜிசி எச்சரிக்கை

Ugc announces students not to join annamalai univeristy dde education

அனைத்து வயதினரும் எவ்வித தடையும் இன்றி தங்கள் நேரம் மற்றும் வசதிக்கேற்ப படிப்பை தொடரும் வகையில் அனைத்து பல்கலைக்கழங்களிலும் தொலை நிலை படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் இந்த படிப்பு உதவியாக உள்ளது.

பல்கலைக்கழகங்களில் தொலைநிலை படிப்புகள் கற்பிக்க முறைப்படி அனுமதி பெற வேண்டும். இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அங்கீகாரமின்றி தொலைநிலை படிப்புகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இங்கு சுமார் 200க்கும் அதிகமான தொலைநிலை படிப்புகள் கற்பித்து கொடுக்கப்பட்டு வருகிறது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புகளில் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலர் ரஜனீஷ் ஜெயின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் யூஜிசி அங்கீகாரம் பெறாமல் தொலைநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்த்து வருகிறது. இது, தொலைநிலை படிப்புக்கான விதிகளை மீறும் செயல். யூஜிசி அங்கீகாரம் பெறாமல், எந்த உயர் கல்வி நிறுவனமும், தொலைநிலை, திறந்த நிலை மற்றும் ஆன்லைன் படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு 2014-15ம் ஆண்டு வரை மட்டுமே தொலைநிலை படிப்புகளை நடத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின், அந்த படிப்புக்கு அங்கீகாரம் பெறவில்லை. எனவே, யூஜிசி அங்கீகாரம் பெறாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகள் செல்லாது.

இந்த படிப்புகளுக்கு பயன் மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டால் அந்த பல்கலைக்கழகம் தான் முழுப்பொறுப்பு. இதனால் அப்பல்கலைகழகம் நடத்தும் தொலைநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this post