தமிழகத்தில் சொத்து வரி அதிரடி உயர்வு.. விரைவில் மின் கட்டண உயர்வும் ஏற்படுமா ?

Property tax rates hike in tamilnadu

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு அரசாணையை தற்போது தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில், ‘சொத்து வரியில் பல ஆண்டுகளாக, எவ்வித உயர்வும் இல்லாததால், உள்ளாட்சி அமைப்புகளின் மொத்த வருவாயில் சொந்த வருவாயின் பங்கு பெருமளவு குறைந்து, செலவீனம் பல மடங்கு உயர்ந்துள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், சொத்து வரியை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு 25 சதவீதம் ; 601 - 1,200 சதுர அடி குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம் ; 1,201- - 1,800 சதுர அடி குடியிருப்பு கட்டடங்களுக்கு 75 சதவீதம் ; 1,800 சதுர அடிக்கு அதிகமான பரப்பளவுக்கு 100 சதவீதம் உயர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள, சொத்து வரியில் வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு - 100 சதவீதம், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டடங்களுக்கு - 75 சதவீதம் உயர்வு.

அதேபோல, சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில் சொத்து மதிப்பு, 2022 - 23ம் நிதியாண்டில்உயர்த்தப்பட உள்ளது. தற்போது சொத்து வரி சீராய்வு, 2022 - 23ம் ஆண்டிற்கான முதலாம் அரையாண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.

நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள தமிழக அரசும், மாநகராட்சிகளை பொறுத்தவரை, அந்தந்த மாநகராட்சிகளே தீர்மானம் பெற்றும் வரி சீராய்வு மேற்கொள்ள அரசு அறிவுரை வழங்கியுள்ளது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 15வது நிதி ஆணையம் கொடுத்த நிபந்தனைகளின் அடிப்படையில் சொத்துவரி உயர்த்தப்படுவதாகவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்த்த நிதி ஆணையம் அறிவுறுத்தியுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மின் கட்டண உயர்வு அறிவிப்பும் விரைவில் வெளியாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Share this post