நிர்வாணமாக உலா வரும் மர்ம நபர்கள்.. விடுதியில் பாதுகாப்பு இல்லை - பாரதியார் பல்கலைகழக மாணவியர் சாலை மறியல்

Bharathiar university students protest for hostel safety

கோவை மருதமலை கோவிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது தமிழகத்தில் டாப் காலேஜ்களில் ஒன்றான பாரதியார் பல்கலைகழகம். இங்கு, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

மாணவ-மாணவியருக்கு, தனித்தனி விடுதிகள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட மாணவியர் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாணவியர் விடுதிக்குள் மர்ம நபர்கள், ஆயுதங்களுடன் சுற்றி வரும்வதாக மாணவியர் விடுதி வார்டனிடம் புகார் அளித்தனர். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நேற்று முன்தினம் இரவு விடுதிக்குள் ஐந்து மர்ம நபர்கள் புகுந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியர் பல்கலை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வடவள்ளி போலீசார் மாணவியர் விடுதி மற்றும் பல்கலை வளாகத்தில் சோதனை நடத்தி யாரும் சிக்கவில்லை.

சம்பவம் குறித்து பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், விடுதி மாணவியர் 300க்கும் மேற்பட்டோர், நேற்று வகுப்புகளை புறக்கணித்து கோவை - மருதமலை ரோட்டில், பல்கலை நுழைவுவாயிலில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தங்கள் பாதுகாப்புக்கு பல்கலை துணைவேந்தர் நேரில் வந்து உறுதி வழங்க வேண்டும் என, மாணவியர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து போலீசார் மாணவியரை சமாதானப்படுத்தி, பல்கலை வளாகத்திற்குள் அமர வைத்தனர்.

அப்போது ஒரு மாணவியர் கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களாக இப்பிரச்னை இருந்து வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன் மாணவி ஒருவர் முதுநிலை படிப்பு முடிந்து விடுதியில் இருந்து செல்லும்போது, மர்ம நபர் ஒருவர் உடைகளை கழற்றி எறிந்து அவர் முன் நின்றுள்ளார். இதுகுறித்து வார்டனிடம் புகார் தெரிவிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் இல்லை.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன், விடுதிக்குள் மர்ம நபர்கள் சிலர் ஆயுதங்களுடன் வந்து சென்றனர். இதன்பின் கடந்த 25ம் தேதி விடுதியில் இருந்த இரு மொபைல் போன்கள் திருடு போய்விட்டன.

பெண்கள் விடுதியின் சுற்றுச்சுவர் மிகவும் உயரம் குறைவாக உள்ளதால், எளிதில் யார் வேண்டுமானாலும் நுழைந்து விடலாம். இரு நாட்களுக்கு முன், மாணவி ஒருவரை கத்தியை காட்டி மாணவர் ஒருவர் மிரட்டியதால் அந்த பெண்ணுக்கு வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்றைய தினம் போலீசார் விடுதியில் ரோந்து சென்றனர். ஆனால், யாரையும் பிடிக்கவில்லை.

நேற்று முன்தினம் விடுதிக்குள் மர்மநபர்கள் சிலர் நிர்வாணமாக வந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை துரத்தினர். ஆனாலும் பிடிக்க முடியவில்லை. கண்காணிப்பு கேமிராக்கள் வைத்திருந்தால் யார் வந்தது எனத் தெரிந்திருக்கும். தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பல்கலை நிர்வாகம் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறினர்.

Bharathiar university students protest for hostel safety

அங்கு வந்த பல்கலை துணைவேந்தர் காளிராஜ் மாணவியரிடம், பெண்கள் அடங்கிய தனிக் குழுவை பாதுகாப்புக்கு நியமிப்பதாகவும், விடுதி வளாகத்தை சுற்றி மின் விளக்குகள் பொருத்தப்படும் எனவும், விடுதிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவியர் போராட்டத்தை கைவிட்டனர்.

Share this post