டீ, காபி முதல் இட்லி, தோசை, பிரியாணி வரை.. 20 சதவீதம் விலையை உயர்த்த ஹோட்டல்கள் முடிவு !

பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வை தொடர்ந்து, கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது. வணிக பயன்பாட்டு காஸ் சிலிண்டர் விலை 268 ரூபாய் உயர்ந்து, 2,406 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால், ஹோட்டல்கள் வைத்து நடத்துவோருக்கு செலவு அதிகரித்துள்ளது. உணவு பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக, சென்னை ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: ‘ கேஸ் சிலிண்டர் விலை உயர்வால், ஹோட்டல் நடத்துவது மிகவும் சிரமமாகி விட்டது. தற்போதைய சூழலில், ஹோட்டல்களில் உணவு பொருட்கள் விலையை, 10 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவாதிக்க, ஹோட்டல் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 6ம் தேதி நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில், உணவு பொருட்கள் விலையை எவ்வளவு உயர்த்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என கூறினார்.
டீ விலை 2 ரூபாய், காபி விலை 3 ரூபாய், இட்லி, பூரி, பொங்கல் போன்றவற்றின் விலை 5 ரூபாய், தோசை, புரோட்டா விலை 10 ரூபாய், சாப்பாடு, பிரியாணி விலை 20 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.