கிரிப்டோகரன்சியா.. மக்களே உஷார்.. இது நமக்கு வேண்டவே வேண்டாம்.. ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் அறிவுறுத்தல்

Reserve bank official warns about cryptocurrency to get involved in india

கிரிப்டோகரன்சி என அழைக்கப்படும் மெய்நிகர் நாணயங்கள் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு ஒன்றிய அரசு 30% வரி விதித்துள்ள நிலையில், அதனை தடை செய்வதே இந்தியாவுக்கு நல்லது என ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரிப்டோகரன்சி வர்த்தகம் என சொல்லப்படும் இதனை குறித்து பல குழப்பங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையில் கிரிப்டோகரன்சி தடை செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருவாயில் 30% வரியாக செலுத்த வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தது குழப்பத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு கிரிப்டோகரன்சியை அங்கீகரித்துள்ளதாக பலரும் விவாதித்து வந்த நிலையில், மாநிலங்களவையில், கிரிப்டோ கரன்சியை ஒன்றிய அரசு அங்கீகரிக்கவும் இல்லை, தடை செய்யவும் இல்லை, வரி மட்டுமே வசூலிக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்த நிலையில் இந்திய வங்கிகள் சங்கத்தின் நிகழ்ச்சியில், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரவிசங்கர், கிரிப்டோகரன்சி என்பது மக்களை ஏமாற்றும் மோசடி திட்டங்கள் போன்றது என குறிப்பிட்டுள்ளார்.

கிரிப்டோகரன்சிகளை நாணயமாகவோ, பண்டமாகவோ சொத்தாகவோ வரையறை செய்ய முடியாது, அவற்றிற்கு உள்ளார்ந்த மதிப்புகள் கிடையாது எனவும் தெரிவித்தார். மக்களை ஏமாற்றும் பேன்சி திட்டம் போன்ற கிரிப்டோகரன்சியை தடை செய்வதே இந்தியாவிற்கு நன்மை என்ற ரவிசங்கர் கூறியுள்ளார்.

Share this post