பள்ளி மாணவர்கள் நலன் கருதி சென்னை மேயர் பிரியா தொடங்கிய பணி !

Chennai mayor priya initiated tablet distribution from chennai school

தேசிய குடற்புழு நீக்க வாரம் (National Deworming Week) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்கத்திற்கான அல்பெண்டசோல் மாத்திரைகளை சென்னை மேயர் பிரியா ராஜன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி துணை ஆணையர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா ராஜன், பள்ளி மாணவர்கள் மற்றும் 20 வயது வரையிலான நபர்களுக்கு குடற்புழு காரணமாக வாந்தி, வயிற்று வலி, காய்ச்சல் போன்ற சில பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அவற்றை தடுக்க 6 மாதங்களுக்கு ஒருமுறை குடற்புழு நீக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 15 லட்சத்து 55 ஆயிரத்து 354 குழந்தைகளுக்கு ஒரே வாரத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன. மேலும் 20 முதல் 30 வயது வரையிலான பெண்கள் 4 லட்சத்து 12 ஆயிரத்து 480 பேருக்கு மாத்திரைகள் வழங்கப்பட இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘வருமுன் காப்போம்’ என்ற மருத்துவ முகாமை சென்னை மேயர் தொடங்கி வைத்தார். இதில் பல்துறை சார்ந்த மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகளை இலவசமாக வழங்கினர்.

பின்னர் பேசிய மேயர் பிரியா ராஜன், சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விரைவில் தகவல் தெரிவிக்கப்படும். பதவி ஏற்று ஒரு வாரம் ஆன நிலையில் கனவு திட்டம் உள்ளிட்ட விஷயங்களை செயல்படுத்த சில நாட்கள் ஆகும் என குறிப்பிட்டிருந்தார்.

Share this post