'கோவையில் உள்ள குண்டர்களை வெளியேற்றுங்கள்': அதிமுக எம்எல்ஏக்கள் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!

Edapadi palanisamy about coimbatore election scenario pressmeet

கோவை: கோவையில் வன்முறையை உண்டாக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. 1,369 மாநகராட்சி கவுன்சிலர், 3,824 நகராட்சி கவுன்சிலர், 7,409 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,602 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடக்கிறது. இந்த பதவியிடங்களுக்கு 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் முடிந்துள்ள நிலையில், திமுகவினர் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் கொடுப்பதாக அதிமுக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கோவையில் போலீஸ் துணையுடன் அனைத்து வார்டுகளிலும் பண விநியோகம் நடப்பதாக குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில் மேலும் கூறியதாவது,

வெளியூரை சேர்ந்தவர்கள் கோவையில் தங்கி வன்முறையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி அங்குள்ள குண்டர்களை வெளியேற்ற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி நாளை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அனைத்து வார்டுகளிலும் போலீஸ் துணையுடன் பரிசுப்பொருள் விநியோகம் செய்யப்படுகிறது.

அதிமுகவின் கோட்டையான கோவையை கைப்பற்ற திமுக இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது. மக்களிடம் திமுக செல்வாக்கை இழந்துள்ளது. அதிமுகவினர் மீது திமுக அரசு பொய்வழக்கு போடுகிறது.

திமுகவினர் வெற்றி பெற முடியாத நிலை இருந்த காரணத்தினால் இவ்வாறு அதிமுகவினர் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

Share this post