ரோப்கார்கள் மோதி விபத்து...1200 அடி உயர மலைப்பகுதியில் சிக்கி தவிக்கும் சுற்றுலா பயணிகள்: ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தீவிரம்..!!

Rope car technical fault accident in jharkhand tourist place

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள திரிகுட் மலையில் ரோப்கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள பாபா பைத்யநாத் கோயிலுக்கு அருகில் உள்ள திரிகுட் மலையில் நேற்று ரோப்கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. இதன் விளைவாக கேபிள் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

Rope car technical fault accident in jharkhand tourist place

ரோப்கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 1 பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 8 பேர் படுகாயமடைந்தனர். சம்பவத்தைத் தொடர்ந்து கேபிள் காரில் இருந்து குதிக்க முயன்ற ஒரு தம்பதியினர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

நேற்று 11 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 48 பேர் சிக்கியுள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தையடுத்து ரோப்வே மேலாளர் மற்றும் மற்ற ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். விபத்து நிகழ்ந்த திரிகுட் மலையில், இந்திய விமானப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் இந்திய ராணுவம் மற்றும் இந்தோ திபெத் எல்லை போலீஸ் என பல்வேறு தரப்பினரும், அவர்களுடன் சேர்ந்து உள்ளூர் கிராம மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரோப் காரில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் இரண்டு எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜார்கண்ட் சுற்றுலாத் துறையின் படி, திரிகுட் ரோப்வே இந்தியாவின் மிக உயரமான செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள ரோப்வே ஆகும். 392 மீட்டர் (1286 அடி) உயரம் கொண்ட திரிகுட் மலையில் அமைந்துள்ள இந்த ரோப்வே 766 மீட்டர் (முக்கால் கி.மீ) நீளம் கொண்டது. மேலும், அதன் வழியே பயணிக்க ரோப்கார் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ரோப்காரில் தான் இப்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

Share this post