பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் .!

Tamilnadu Goverment Fine Wihtout Mask Public Place

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக இரண்டாயிரத்திற்கும் கீழாக பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்பு, தற்போது இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது.

குறிப்பாக, தலைநகர் டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இதையடுத்து டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வரும் மே மாதம் 8-ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: “தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

கொரோனா பரவல் அதிகரிப்பதால் பதற்றம் அடைய தேவை இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே வழங்கி உள்ளோம். சென்னை ஐஐடியில் கொரோனா உறுதியான மாணவர்கள் உடல்நிலை சீராக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Share this post