சிறையில் சொகுசு வசதிக்காக கைமாறிய 2 கோடி ரூபாய் ! வழக்கில் சசிகலாவிற்கு முன்ஜாமீன் !

Sasikala claims munjaameen from the bribe case of bangalore jail

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து மூவரும் விடுதலையாகி விட்டனர்.

இதனிடையே சசிகலா சிறையில் இருந்தபோது சட்ட விதிமுறைகளை மீறி அவருக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருந்ததை சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா அம்பலப்படுத்தினார். சொகுசு வசதிகளை பெற ரூ.2 கோடி லஞ்சமாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு கைமாறியுள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.

இதனை ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவும் உறுதி செய்தது. இதையடுத்து கர்நாடக ஊழல் தடுப்பு படையினர் சசிகலா மீது கடந்த 2018ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த ஜனவரி 7ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார், ரூ.2 கோடி லஞ்ச வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை கர்நாடக ஐகோர்ட்டு அளித்த உத்தரவுப்படி தாக்கல் செய்தனர். மேலும் ரூ.2 கோடி லஞ்ச வழக்கில் குற்றவாளிகளாக பரப்பன அக்ரஹாரா சிறை சூப்பிரண்டாக இருந்த சோமசேகர், டாக்டர் அனிதா, அதிகாரிகள் சுரேஷ், கஜராஜ் மாகனூர், சசிகலா, இளவரசி ஆகிய 7 பேர் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயண் பட் முன்னிலையில், ரூ.2 கோடி லஞ்ச வழக்கு விசாரணைக்கு வந்தது. கடந்த பிப்ரவரி 11ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரும் மார்ச் 11ம் தேதி (இன்று) நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டாக்டர் அனிதா, தன் மீது விசாரணை நடத்த கர்நாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்த நிலயில், அதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இதையடுத்து சசிகலா உள்ளிட்ட 6 பேரும் இன்று காலை 11 மணிக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

அப்போது தனக்கு முன்ஜாமின் வேண்டும் என சசிகலா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போது நீதிபதி, இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், இதில் முன்ஜாமின் வழங்க முடியாது என்றும், 5 லட்ச ரூபாய்க்கான பிரமான பத்திரத்தை தாக்கல் செய்து நிபந்தனை முன்ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என சொன்னதை அடுத்து, பத்திரத்தை சமர்ப்பித்ததையடுத்து, சசிகலாவுக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக வரும் ஏப்ரல் 16ம் தேதி சசிகலா மற்றும் இளவரசி மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share this post