'தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் பின்னர் சீல்' : தமிழக அரசு

Plastic items usage must be avoided with strict fines

கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட். மேலும், சுற்றுசூழல் மற்றும் சுகாதாரம் அடிப்படையில், பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என தீர்ப்பளித்திருந்தது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து பிளாஸ்டிக் சங்கங்கள் சார்பில் ஐகோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக 36 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முதல் சோதனையில் சிறு வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தற்போது அபராதம் விதிக்கப்படுவதாகவும், பயன்படுத்தப்படுவதை நிறுத்தாவிட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சீல் வைத்தாலும், அவை தொடர்ந்து புழக்கத்தில் உள்ளதாகவும், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை முழுமையாக தடுக்கும் வகையில் எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தினர்.

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வு வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டுமென தெரிவித்த நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

Share this post