ஹிஜாப்பிற்கான தடை உத்தரவு தொடரும்: பரபரப்பு தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்றம்.!

Hijob Controversy Karnataka High Court Final Judgement Today

ஹிஜாப் அணிய அரசு அறிவித்த தடை செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி துண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர்.

இதன் காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டம் வெடித்தது. இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், மாணவர்கள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தது.

மேலும் விசாரணை முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், இவ்வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹிஜாப் தொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்த தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி மற்றும் கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு, ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தின்படி அத்தியாவசியமானது அல்ல எனத் தெரிவித்தனர். மேலும், ஹிஜாப் அணிய கல்வி நிறுவனங்கள் விதித்த தடை செல்லும் எனத் தீர்ப்பளித்தனர்.

Share this post