கண்ணீர் மல்க அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறும் உக்ரைன் மக்கள்

Russian Ukraine War Conflict People Removing Form Ukraine

உக்ரைனில் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வரும் நிலையில் மக்கள் பெரும் பீதியுடன் உள்ளனர். உயிருக்கு பயந்து கொண்டு பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச்செல்லும் அவலம் நிலவி வருகிறது.

உக்ரைனில் ஆவேசமாக தாக்கி வரும் ரஷ்ய படைகள் அடுத்து தலைநகர் கீவில் முழு வீச்சில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தலைநகர் கீவை பாதுகாக்கும் வகையில் அதைச்சுற்றி பிரதேச ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளன. கீவ் நகரத்தின் தெருக்களிலும் ராணுவ வீரர்கள் இடைவிடாமல் ரோந்து மேற்கொண்டுள்ளனர். ரஷ்ய படைகள் குண்டுமழை பொழியும் நிலையில் உக்ரைன் படைகளும் பதில் தாக்குதலை நடத்தி வருகின்றன.

கிழக்கு உக்ரைனில் சுயாட்சி பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஹார்லிவ்கா என்ற ஊரில் உள்ள பள்ளியின் மீது உக்ரைன் படைகள் குண்டு வீசி தாக்கின. அதில் இருவர் கொல்லப்பட்டனர். இதனால் அங்குள்ளவர்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையே குண்டுகள் ஏவுகணை வீச்சுகளில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைன் நாட்டு எல்லைகளில் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இது தவிர நடை பயணமாகவும் ரயில்களிலும் கூட மக்கள் உக்ரைனை விட்டு தப்பி வெளியேறி வருகின்றனர். உக்ரைனிலிருந்து வருவோருக்கு போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா, மால்டோவா நாட்டு அதிகாரிகளும் தன்னார்வலர்களும் வரவேற்று உணவு, இருப்பிட வசதிகளை செய்து தருகின்றனர். இவ்வாறு உக்ரைனிலிருந்து வருவோர் அனைவருமே பெண்கள் மற்றும் குழந்தைகள், முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராணுவ பணிக்கு தேவை என்பதால் 18 முதல் 60 வயது வரையுள்ளவர்களை நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அனுமதிக்கவில்லை. இது வரை சுமார் ஒரு லட்சம் பேர் உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் சண்டை தொடர்ந்தால் மேலும் 40 லட்சம் பேர் வரை அகதிகளாக வெளியேறக் கூடும் என்றும் ஐநா மனித உரிமை கவுன்சில் கணித்துள்ளது.

Share this post