சைக்கிளில் அதிகாலை ரோந்து பணி - வடசென்னை இணை கமிஷனர் ரம்யாபாரதி அதிரடி

Vadachennai ips ramya bharathi cycle roam during early mornings

இரவு நேரங்களில் பொதுமக்களுக்காக போலீசார் ரோந்து வருவது வழக்கம். ஆனால், தற்போது இணை கமிஷனரான ஐபிஎஸ் அதிகாரி ரம்யாபாரதி போலீஸார் என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க ரோந்து வந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் வாகனத்தில் சென்றால் அலர்ட்டாக வாய்ப்புள்ளது எனக் கருதி, சைக்கிளில் ரோந்துப் பணிசென்றுள்ளார். அதோடு, சைரன் வைத்த போலீஸ் வாகனத்தில் சென்றால் இரவு நேரத்தில் சென்னையில் என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்துக் கொள்ள முடியாது என இணை கமிஷனர் ரம்யாபாரதி சைக்கிளில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலிருந்து ரோந்து பணியைத் தொடங்கியுள்ளார்.

Vadachennai ips ramya bharathi cycle roam during early mornings

போலீஸார் காவல் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறார்களா அல்லது என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ரம்யாபாரதி நேரிடையாக கண்காணித்தார். இதையடுத்து, வைத்தியநாதன் பாலம், புதிய வண்ணாரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான இளையமுதலி தெருவிலும் தண்டையார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்டபட்ட கைலாசம் தெரு, சென்னியம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களுக்கு சைக்கிளில் சென்றார்.

அடுத்து , தண்டையார்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதிகாலை 4 மணியோடு ரோந்துப் பணியை முடித்துக் கொண்ட இணை கமிஷனர் ரம்யா பாரதி, 9 கி.மீட்டர் தூரம் சைக்கிளிலேயே வடசென்னையில் வலம் வந்துள்ளார். இந்த அதிரடி சைக்கிள் ரோந்து பணியால் வடசென்னை போலீஸார் ஆடிப்போய்விட்டனர்.

இதுகுறித்து இணை கமிஷனர் ரம்யா பாரதியிடம் பேசியபோது: ‘அதிகாலை 2.45 மணிக்கு தொடங்கிய சைக்கிள் ரோந்துப் பணி அதிகாலை 4 மணிக்கு முடிவடைந்தது. சைக்கிளில் சென்றதால் எளிதில் எல்லாவற்றையும் கண்காணிக்க முடிந்தது. நான் சென்ற இடங்களில் போலீஸார் விழிப்புடன் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இரண்டு பேரைப் பிடித்து விசாரிக்க உத்தரவிட்டேன். இந்த ரோந்து பணி மூலம் இரவு நேரங்களில் நடக்கும் குற்றங்கள் குறையும். இந்த ரோந்துப் பணி அடிக்கடி நடக்கும்’ என்றார்.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபுதான் வார நாள்களில் சைக்கிளில் இதைப் போன்று சென்று காவல் நிலையங்களை ஆய்வு செய்வார். அதே ஸ்டைலில் இளம் போலீஸ் அதிகாரி ரம்யா பாரதியும் அதிகாலை நேரத்தில் சைக்கிள் ரோந்துப் பணியை மேற்கொண்டுள்ளது பாராட்டுக்குரியதாக மாறியுள்ளது.

Share this post