'பிளாஸ்டிக்' கழிவுகளில் ரோடு ! காஞ்சியில் துவங்கிய பணி !

Plastic waste roads in kancheepuram work started

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், படப்பை உட்பட ஆறு கிராம ஊராட்சிகளில், தலா 16 லட்சம் ரூபாய் மதிப்பில், பிளாஸ்டிக் கழிவுகளை துாளாக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

Plastic waste roads in kancheepuram work started

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 5 ஒன்றியங்களில் 274 ஊராட்சிகள் அதில் மொத்தம் 2.16 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து பெறப்படும் நுாற்றுக்கணக்கான டன் குப்பை, மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரிக்கப்படுகிறது.

Plastic waste roads in kancheepuram work started

இங்கே 24 இடங்களில், மக்கும் குப்பையை துாளாக்கி, உரமாக மாற்றும் பணிகள், பல நாட்களாகவே நடைபெற்று வருகின்றன. அதேசமயம், மக்காத பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி, மறு பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் கிடப்பில் இருந்தன.

இந்நிலையில் புதிய முயற்சியாக, மாவட்ட நிர்வாகம் சார்பில், பிளாஸ்டிக் கழிவுகளை துாளாக்கி அவற்றை வைத்து சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, படப்பை ஊராட்சியில், துாய்மை பாரத இயக்கம் நிதியில் 16 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று வகையான இயந்திரங்கள் நிறுவப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Plastic waste roads in kancheepuram work started

ஊரக வளர்ச்சித் துறையினர் கூறியதாவது, மூன்று வகையான இயந்திரங்கள், படப்பையில் இனி வேலை செய்யும். ஒரு இயந்திரம் பால் கவர், ஆயில் கவர், கடைகளில் வழங்கப்படும் பிளாஸ்டிக் கவர் போன்றவற்றை துாளாக்கி தரும்.

இந்த இயந்திரத்தில், 60 மைக்ரான் அடர்த்தி உடைய பிளாஸ்டிக் பொருட்களை போடலாம்.

மற்றொரு இயந்திரம், பிளாஸ்டிக் பொருட்களில் ஒட்டியிருக்கும் மண்ணை அகற்றி பிளாஸ்டிக் பொருட்களை மட்டும் பிரித்து கொடுக்கும் பணியை செய்யும்.

இன்னுமொரு இயந்திரம், பெரிய அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை அழுத்தி, மிக சிறிய பொருளாக மாற்றி தரும். மொத்தமாக அவற்றை எடுத்து, அருகில் உள்ள சிமென்ட் கம்பெனிகளில் வழங்கிவிடலாம்.

இதேபோல், நகர்ப்புற தோற்றத்தில் இருக்கும் மேலும் ஐந்து கிராம ஊராட்சிகளில் இந்த இயந்திரங்களை, அடுத்த வாரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து சாலை அமைக்கும் திட்டமும் இருப்பதால், எதிர்காலத்தில் நல்ல பலனை கொடுக்கும் என அவர்கள் கூறினர்.

கொளப்பாக்கம், திருமங்கலம், இருங்காட்டுக்கோட்டை, அய்யம்பேட்டை, கோனேரிக்குப்பம் ஆகிய இடங்களில் அமையவுள்ளது. உத்திரமேரூரில் இடம் தேர்வு செய்யும் பணி நடைபெறுவதால், சில நாட்கள் கழித்து, பிளாஸ்டிக் துளாக்கும் இயந்திரம் அங்கு அமைக்கப்படும்.

வழக்கமான தார்ச்சாலையுடன், இந்த பிளாஸ்டிக் துகள்களையும் சேர்த்து சாலை அமைத்தால், கூடுதல் ஆண்டுகள் உழைக்கும். பிளாஸ்டிக் சாலையில் தண்ணீர் உள்ளே செல்வதை தடுக்கும் என்பதால், சாலை பழுதாகாது என்கின்றனர்.

Share this post