இருவிதமாக வரி.. இது என்ன விதத்தில் நியாயம் - அதிருப்தியில் கோவை மக்கள் !

Coimbatore people complaints about tax rates

கோவை மாநகராட்சியை பொருத்தவரையில் பழைய மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு விதமாகவும், இணைக்கப்பட்ட பகுதிகளில் ஒரு விதமாகவும் குடிநீர் வரி வசூலிக்கப்படுகிறது. மக்களிடம் இது அதிருப்தியை ஏற்படுத்துவதுடன், மாநகராட்சிக்கும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

கோவை மாநகராட்சி, 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. பழைய மாநகராட்சிப் பகுதியுடன், குறிச்சி, குனியமுத்துார், கவுண்டம்பாளையம் நகராட்சிகள், வடவள்ளி, வீரகேரளம், துடியலுார், வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டி, காளப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் விளாங்குறிச்சி ஊராட்சிப் பகுதிகள் இணைக்கப்பட்டன. 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், இவற்றில் பல பகுதிகளுக்கு இன்னும் முழுமையான அடிப்படை வசதிகளே கிடைக்கவில்லை.

Coimbatore people complaints about tax rates

பழைய மாநகராட்சிப் பகுதிகளில், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், 24 மணி நேர குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இணைக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில், சாக்கடை கால்வாய் வசதிகள் செய்து தரப்படவில்லை.

குடிநீர் பற்றாக்குறையும் மிக அதிகமாக உள்ளது. ஆனால், மாநகராட்சி முழுவதும் ஒரே மாதிரியான சொத்து வரி விதிக்கப்படுகிறது. இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

இது ஒரு புறமிருக்க, மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பல பகுதிகளில், மாநகராட்சி சொத்துவரி, காலியிட வரி போன்றவை, மாநகராட்சி விதிகளின்படியும், குடிநீர் கட்டணம் மட்டும், பழைய உள்ளாட்சிகளில் வசூலிக்கப்பட்ட அதே அளவிலும் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அதேபோன்று, பழைய குறிச்சி, குனியமுத்துார் நகராட்சிப் பகுதிகளில் முக்கால் இன்ச் விட்டமுள்ள குடிநீர்க் குழாய் இணைப்பும், மற்ற பகுதிகளில் அரை இஞ்ச் விட்டமுள்ள குழாய் இணைப்பும் தரப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

பல பகுதிகளில் குடிநீர் மானியும் பொருத்தப்படவில்லை. இதனால், எவ்வளவு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது என்று அளவீடு செய்யப்படுவதில்லை. குடிநீர் அதிகளவு செல்லும் வீட்டுக்கும், மிகக்குறைவான குடிநீர் செல்லும் வீட்டுக்கும் ஒரே அளவில் கட்டணம் வசூலிக்கப்படும் போன்றவை அரங்கேறி வருகிறது. இது, அதிருப்தியை ஏற்படுத்துவதுடன், மாநகராட்சிக்கும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

மாநகராட்சி முழுவதற்கும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதுடன், அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ஒரே மாதிரியாக வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்கு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கவுன்சிலர்கள் இணைந்து குரல் கொடுக்க வேண்டுமென்பதே, கோவை மாநகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Share this post