பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டமா..? மத்திய அரசின் பதில் !

Central government answers for morning breakfast in schools program

பட்ஜெட் மீதான விவாதம் குறித்து நாடாளுமன்றத்தில் முதல் அமர்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், 2-வது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மக்களவையில் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யான கனிமொழி எழுப்பிய கேள்வியில், ‘தேசிய மதிய உணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 12 கோடி மாணவ, மாணவிகளுக்கும் காலை உணவு வழங்குவதற்கு 4,000 கோடி ரூபாய் தேவைப்படும் என 2021-22 ஆண்டில் மத்திய அரசு மதிப்பிட்டது.

அதன்படி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா? இது குறித்து மத்திய அமைச்சரவை ஆய்வு செய்ததா?’ எனக் கேட்டிருந்தார்.

இதற்கு மத்தியக் கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, ‘‘தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 ஆண்டின் படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அல்லது 6 முதல் 14 வயது இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் ஊட்டச்சத்துடன் சமைக்கப்பட்ட மதிய உணவு பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற வேலை நாட்களில் இந்த உணவு அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி போஷன் திட்டத்தின்படி தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு 12 கிராம் புரதத்தை உள்ளடக்கிய 450 கலோரிகள் உணவும், தொடக்கப் பள்ளிகளுக்கு அடுத்த நிலை குழந்தைகளுக்கு 20 கிராம் புரதம் உள்ளிட்ட 700 கலோரி உணவும் வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவு அளிப்பது குறித்த திட்டம் எதுவும் அரசிடம் இல்லை எனவும் அதேநேரம் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பால், முட்டை, பழங்கள் போன்ற கூடுதல் ஊட்டச்சத்து பொருட்களை தங்களது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகின்றன எனவும் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.

Share this post