தமிழகம் முழுவதும் நாளை சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்..!

சொத்து வரி உயர்வை கண்டித்து, சென்னையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் வகையில் சொத்து வரியைதிமுக அரசு 150% வரை உயர்த்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திமுக அரசை கண்டித்தும், சொத்து வரியை உயர்வை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தியும் மாவட்ட அளவில்அதிமுக 5-ம் தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
அதன்படி, சென்னையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையிலும் ஆர்ப் பாட்டம் நடத்தப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
வழக்கமாக அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டால் ஓபிஎஸ் தேனியிலும் பழனிசாமி சேலத்திலும் பங்கேற்பார்கள். ஆனால், தற்போதைய ஆர்ப்பாட்டத்தில் இவர்கள், சென்னை மற்றும் திருச்சியை முன்னிலைப்படுத்தி பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.