கோவை ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தர்ணா ..!

Coimbatore Ex Minister Velumani Strike Collector Office Against Dmk Voilation

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது . இதற்கான பிரச்சாரம் நேற்றோடு நிறைவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் பிற கட்சி வேட்பாளர்களை மிரட்டியும், கடத்தியும் திமுகவினர் அராஜகப் போக்கில் ஈடுபடுவதாக அதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், தேர்தல் விதிகளை மீறி கோவையில் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ், கொலுசு மற்றும் ரொக்கம் ஆகிய பரிசுப் பொருட்களை திமுகவினர் வழங்கி வருவதாகவும், இதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் இருந்து ரவுடிகளையும், ஆட்களையும் கோவைக்கு அழைத்து வந்துள்ளதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், பரிசுப் பொருட்களை வழங்கும் திமுகவினர் குறித்து போலீஸில் புகார் அளிக்கும் அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதாகவும் புகார் கூறி வருகின்றனர்.

இதனிடையே, திமுகவினருக்கு ஆதரவாக போலீசார் நடந்து கொள்வதால் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்று அதிமுகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவினருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எஸ்பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, காவல்துறையே திமுகவின் ஏவல்துறையாக செயல்படாதே என்றும், தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டுமானால், துணை ராணுவத்தினரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:- கோவையில் இன்று பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. வெளியூர்காரர்கள் இதுவரை வெளியேறவில்லை. தேர்தலை பாதுகாப்பாக நடத்த துணை ராணுவத்தை வரவழைக்க வேண்டும். தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று கூறி தேர்தல் ஆணையம் உட்பட அனைவரிடமும் புகார் அளித்து விட்டோம் ஆனால். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் சட்டத்தை பின்பற்ற வேண்டும், இல்லை என்றால் அவரை மாற்ற வேண்டும், எனக் கூறினார்.

தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், “உதயநிதி அரசியல் அநாகரீகத்தை செய்கிறார்.முன்னாள் அமைச்சராக உள்ள வேலுமணிக்கு சாவுமணி அடிப்பேன் என்று பேசுகிறார். இந்த அராஜக செயலை கண்டிக்கிறோம். முழுக்க முழுக்க மாவட்ட நிர்வாகம் உடந்தையாக உள்ளது. தேர்தல் பணியில் இருந்து அந்த அதிகாரிகள் விலக வேண்டும். திமுக வெத்துவேட்டு அரசியல் செய்யக்கூடாது.” என்றார்.

Share this post