132 பேருடன் சென்ற சீன போயிங் விமானம் விபத்து.. இறுதி நிமிடங்களில் இதுதான் நடந்துள்ளது !

No updates about 132 passengers who travelled in china flight which got crashed

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற போயிங் 737 ரக விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடக்கும் நிலையில், மேலும் சில பாகங்கள் எரிந்து வரும் நிலையிலும் பயணிகள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு என கருதப்படுகிறது.

கடந்த 2010ம் ஆண்டுக்குப் பின்னர் சீனாவில் ஏற்பட்டுள்ள பெரிய விமான விபத்து என்பதால் சீன அதிபர் ஜி சின்பிங் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான விமானம் சீனாவின் தென்மேற்கு நகரான குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 1.11 மணியளவில் புறப்பட்டு குவாங்சு மாகாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சரியாக 2.22 மணியளவில் விமானம் 3,225 அடி உயரத்தில் 376 நாட் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது.

பின்னர் திடீரென ரேடார் கண்காணிப்பில் இருந்து விமானம் விலகியது என சீனாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த நொடியில் தான் விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் காட்டுத் தீ பரவிவிட்டதால் மீட்புப் பணிகள் கஷ்டமாக உள்ளது.

இதற்கிடையில், விபத்தை நேரில் பார்த்த மலைகிராமவாசி ஒருவர், ’விமானம் விழுந்தவுடன் மிகப் பெரிய சத்தம் கேட்டது. தீ பிழம்பும் புகையுமாக அந்த இடம் மாறி சிறிது நேரத்தில் மூங்கில் காட்டில் தீ வேகமாகப் பரவியது’ என்றார்.

விபத்துப் பகுதியில் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன, புகைப்படங்கள், காட்சிகள் அனைத்தும் உயிர் பிழைத்தோர் குறித்த நம்பிக்கையை குறைக்கும் வகையில் உள்ளது.

ஃப்ளைட் ட்ராக்கர் ஃப்ளைட் ரேடார் 24, விமான விபத்து நடந்த விதத்தைக் கணிப்பின்படி, சரியாக 2.15 மணிக்கு விமானம் தலைகுப்புற விழுந்துள்ளது. 29,100 அடி உயரத்தில் இருந்து விமானம் 9,075 அடி உயரத்திற்கு சரிந்துள்ளது. பின்னர், அடுத்த 20 வினாடிகளில் 3225 அடிக்கு சரிந்து, அத்துடன் விமானம் தொடர்பிலிருந்து விலகியுள்ளது.

சீனாவில் கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு E-190 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 44 பேர் இறந்தனர். அதன்பின்னர் இன்று நடந்த விபத்தில் 132 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் 122 பேர் பயணிகள்; மீதமுள்ளோர் விமான பணியாளர்கள் ஆவர்.

Share this post