மதுரை டூ காசி டூர்.. இந்திய ரயில்வே சார்பில் சிறப்பு சுற்றுலா ரயில் முன்பதிவுக்கு விவரங்கள் இதோ !

Madurai to kasi special trains alloted for full tour

மதுரை டூ காசி இயக்கப்பட உள்ள கோடைக்கால சிறப்பு சுற்றுலா ரயிலில் பயணிக்க, முன்பதிவு செய்து கொள்ள தென்னக ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், மதுரையில் இருந்து திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் வழியாக காசிக்கு சுற்றுலா ரயில் இயக்க உள்ளது. இந்த சுற்றுலா ரயில் வருகிற ஏப்ரல் 28ம் தேதி அதிகாலை மதுரையில் இருந்து புறப்படுகிறது.

இப்பயணத்தில், தமிழ் புத்தாண்டில் முதன் முதலாக வரும் அமாவாசை அன்று, கயாவில் முன்னோர்களுக்கு சிறப்பு தர்ப்பணம் செய்யலாம். காசியில் கங்கா ஸ்நானம் செய்து விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தெய்வங்களையும் தரிசிக்கலாம். அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, அட்சய திரிதியை அன்று ஹரித்வாரில் கங்கையில் நீராடி, மானச தேவியை தரிசிக்கலாம்.

Madurai to kasi special trains alloted for full tour

தொடர்ந்து, ஆக்ரா தாஜ்மஹால், மதுரா கிருஷ்ண ஜென்மபூமி, புதுடில்லி ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்து திரும்ப வரும் வழியில், ஸ்ரீ ராமானுஜர் சமத்துவ சிலையையும் தரிசித்து வரும்படி சுற்றுலா பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, இந்த கோடை கால சுற்றுலா ரயிலில் குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. மேலும், சுற்றுலா தலங்களில் குளிர்சாதன அறைகளும் தேவைக்கேற்ப ஏற்பாடு செய்யப்படுகிறது.

இந்த 11 நாள் சுற்றுலாவுக்கு கட்டணமாக வசதிகளுக்கேற்ப 19,900 .. 26,500.. மற்றும் 36,900 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது. இந்த சுற்றுலாவுக்கு, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் விடுப்பு பயணச்சலுகை வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த சுற்றுலா பற்றிய மேலும் விவரங்களுக்கு, 90031 40714, 82879 32122 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது www.irctctourism.com என்ற இணையதளத்திலும் பார்க்கலாம். அதே இணையத்தளத்தில் முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Share this post