ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். இரண்டு மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு..!

Japan Earth Quake Millions Houses Removed Electricity

ஜப்பானின் வடக்கில் புகுஷிமா கடற்பகுதியை மையமாக கொண்டு நேற்று இரவு 7.4 புள்ளிகளாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே நேற்று இரவு இந்திய நேரப்படி 8.06 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

60 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் புகுஷிமா பகுதியே குலுங்கியது. ஜப்பானின் கிழக்கு பகுதியிலும் குறிப்பாக தலைநகர் டோக்கியோவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

அங்கு வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. சுமார் இரண்டு மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் கிழக்கு ஜப்பானின் பெரும்பகுதியை உலுக்கிய நிலநடுக்கத்தால், ஒரே இரவில் இருவர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஜப்பானின் பெரும்பகுதிகளில் ஒரே இரவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு, ஷிரோஷி, மியாகி மாகாணத்தில் புல்லட் ரயில்கள் தடம் புரண்ட சம்பவங்களும் நடந்தன. கடந்த 2011ம் ஆண்டு மார்ச்சில் இதே பகுதியில் 9.0 புள்ளிகள் அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு பெரும் பாதிப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Share this post