"எனக்கு நெஞ்சு வலியா?.. சில்லறை தனமா இப்படி பண்ணாதீங்க" - நடிகர் விமல் ஆவேசம்
தமிழ் சினிமா உலகில் ‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விமல். அதனைத் தொடர்ந்து, சற்குணம் இயக்கிய ‘களவாணி’ திரைப்படம் விமலுக்கு மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் தனக்கே உரிய இயல்பான உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பால் எதார்த்த நாயகனாகவும் பக்கத்து வீட்டு பையனாகவும் அனைவரையும் கவர்ந்தார் விமல்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு கிராமத்துக் கதைகள் மற்றும் நகர கதைகளில் நடித்த விமல், காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட் திரைப்படங்களிலும் நடித்தார். மஞ்சப்பை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தூங்கா நகரம், தேசிங்கு ராஜா மற்றும் கலகலப்பு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார்.
அதைபோலவே நடிகர் விமல் நடித்த வாகை சூட வா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விமல் சில படங்களைத் தயாரித்தும் அதில் நடித்தார். சமீபத்தில், Zee5 OTT தளத்தில் விமல், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது.
விமல் அடுத்ததாக 2002ல் விஜய் நடித்த “தமிழன்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அப்துல் மஜீத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விமல் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின.
இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகர் விமல், தன் சமூக வலைதளப் பக்கத்தில், ‛நலமுடன் படப்பிடிப்பில் இருந்து’ என வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் வீடியோவில், “செய்தி கேட்டேன். எனக்கு நெஞ்சு வலி, மருத்துவமனையில் அனுமதி என்று. அதெல்லாம் கிடையாது நான் நலமாக இருக்கிறேன். புதுமுக இயக்குனர் மைக்கேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறேன்.
இன்னும் 5 நாளில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது. இன்னொரு செய்தி பார்த்தேன். நான் மதுவுக்கு அடிமையாகி வீட்டில் ரகசிய சிகிச்சை என்று இதெல்லாம் பார்க்கும் போது காமெடியா இருக்கு. வேண்டாத விஷக்கிருமிகள் இது போல பண்றாங்க. சின்ன பிள்ளை தனமான வேலைகளை விட்டுட்டு பொழைக்கிற வழிய பாருங்க. நீங்களும் வாழுங்க. மத்தவங்களையும் வாழ விடுங்கள்”. என விமல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
சில்லறை தனமா இப்படி பண்ணாதீங்க!🔥 - நடிகர் விமல் ஆவேசம் 😡 | #vimal #shorts pic.twitter.com/ot4C0lcFAO
— Kalakkal Cinema (@kalakkalcinema) January 6, 2023