"எச்சரிக்கையாக இருங்கள்.. நாங்கள் பொறுப்பல்ல" - விஜய் டிவி அதிரடி பரபரப்பு அறிக்கை!
தொலைக்காட்சி தொடர் மற்றும் நிகழ்ச்சிகள் என்றாலே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும், தொடருக்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சூப்பர் சிங்கர், கலக்கபோவது யாரு, குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் செம பேமஸ். மேலும், ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல் தொடர்கள் சின்னத்திரை டிஆர்பியில் இடம்பெறுவது வழக்கம்.
தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் பிரபலமான இந்த சேனல், ஸ்டார் குரூப்பை சேர்ந்தது. சீரியல்கள் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் வித்தியாசமான நிகழ்ச்சிகள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். இதன்மூலம் பல திறமையான கலைஞர்களையும் விஜய் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி சேனல் தற்போது பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்காக டிஸ்னி ஸ்டார் மற்றும் ஸ்டார் விஜய் அல்லது தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனம் பணம் கேட்பதில்லை. மேலும் எங்களின் எந்த ஒரு நிகழ்ச்சிக்காகவும் பணம் அல்லது வேறு வகையில் எதாவது ஆதாயம் பெற்று நாங்கள் யாருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை. ஸ்டார் விஜய் பெயரைப் பயன்படுத்தி வரும் இத்தகைய போலியான வாய்ப்புகள் மற்றும் அமைப்புகளில் இருந்தும் மற்றும் இந்த அலைவரிசையின் பெயரை பயன்படுத்தி பணத்தை கோருபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இத்தகைய தவறான நபர்கள் அல்லது நிறுவனங்களிடம் உங்களால் செலுத்தப்பட்ட பணம் பகிரப்பட்ட தனிப்பட்ட தகவல்களால் உங்களுக்கு ஏற்பட்ட மற்றும் ஏற்படக்கூடிய எந்த விதமான இழப்பு மற்றும் சேதம் ஆகியவற்றுக்கு இந்த நிறுவனம் மற்றும் அலைவரிசை எந்த ஒரு விதத்திலும் பொறுப்புள்ளதாகவோ அல்லது கடமைப்பட்டுள்ளதாகவோ இருக்காது என தெரிவித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சி சேனல் தனது சமூக வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை பார்த்த நெட்டிசன்கள், ஏதோ சம்பவம் நடந்துள்ளது போல என்றும் விஜய் டிவி பெயரை சொல்லி யாரோ சரியான சம்பவம் செய்திருக்கிறார்கள் என்றும் பதிவிட்டு உள்ளனர். சீரியல்களில் நடிக்க வைக்கிறேன், சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என சினிமா ஆசையில் இருக்கும் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஏமாற்றப்படுவது தொடர் கதையாகி வரும் நிலையில் விஜய் டிவி இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.