‘மாமனிதன்’ ஆக விஜய் சேதுபதி ? முழு விமர்சனம் இதோ
தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் போன்ற கிராமப்புற திரைப்படங்களை ரசிகர்களுக்கு பிடித்த வண்ணம் இயக்கியவர் சீனு ராமசாமி. தற்போது, நடிகர் விஜய் சேதுபதியுடன் 4-வது முறையாக இணைந்து உருவாக்கப்பட்ட திரைப்படம் மாமனிதன்.
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். மேலும் இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டே மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்தது. இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஆர்.கே.சுரேஷ் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தார்.
அதன்படி கடந்த மே மாதம் 6ம் தேதி மாமனிதன் படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்திருந்தனர். அதன் பிறகு, மே 6ம் தேதிக்கு பதில் மே 20ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு நிறைய முறை தேதி மாற்றம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு தற்போது இப்படம் வெளியாகியுள்ளது.
தேனி பண்ணைபுரம் கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கக்கூடிய ராதாகிருஷ்ணன், தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் மாதவன் என்கிற ரியல் எஸ்டேட் புரோக்கர் அவருடைய நிலத்தை விற்பதற்காக வருகிறார்.
தன்னுடைய குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்படும் ஆட்டோ ஓட்டுனரான ராதாகிருஷ்ணன், டக்குனு ரியல் எஸ்டேட் புரோக்கராக மாறி, அந்த ஊரில் இருக்கும் மக்களிடம் பேசி நான் உங்களுக்கு இந்த நிலத்தை விற்று தருகிறேன் என மாதவனிடம் கூறுகிறார். அதற்காக தனக்கு கமிஷன் தர வேண்டும் என்றும் மாதவனிடம் டீல் பேசிக் கொள்கிறார்.
அதற்கு மாதவனும் ஒத்துக்கொள்கிறார். தன்னுடைய குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க வேண்டும் என்கிற ராதாகிருஷ்ணனின் முயற்சி வெற்றி கண்டதா? இல்லையா? ராதாகிருஷ்ணன் எப்படி மாமனிதன் ஆனார் என்பதை உணர்வுப்பூர்வமான திரைக்கதை உடன் விளக்கி உள்ள படம் தான் இந்த மாமனிதன்.
நடிகர் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனர் ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காயத்ரி. இயக்குனர் சீனு ராமசாமி வழக்கம்போல் தன்னுடைய ஸ்டைலில் மண் மனத்தோடு கூடிய ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வியலை தான் இந்த படத்தில் பேசி இருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா என இரண்டு இசை அரசர்கள் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தாலும், பாடல்களோ பின்னணி இசையோ மனதில் பதியும்படி இல்லாதது படத்திற்கு பின்னடைவாக தெரிகிறது.