“தாடை & பற்கள் உடைந்துவிட்டது”- மருத்துவமனையில் இருந்து விஜய் ஆண்டனி வெளியிட்ட போட்டோ..!
நடிகர், பாடகர், இசையமைப்பாளர், எழுத்தாளர் போன்ற பல முகங்களை கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. 2005ம் ஆண்டு சுக்ரன் என்னும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், டிஸ்யூம், நான் அவன் இல்லை, காதலில் விழுந்தேன், வேட்டைக்காரன், நான், பிச்சைக்காரன் என பல திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
நாக்க மூக்க, மஸ்காரா போட்டு போன்ற பாடல்கள் மூலம் மிக பேமஸ் ஆன இவர், நான், சலீம், பிச்சைக்காரன், சைத்தான், அண்ணாதுரை, காளி, கொலைகாரன் போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
தற்போது, கொலை, காக்கி, பிச்சைகாரன் 2, கொலை, மழை பிடிக்காத மனிதன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் ஆக்சன் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, கடலில் பயன்படுத்தப்படும் ஸ்கை ஜெட் ஒன்றோடு ஒன்று மோதி விஜய் ஆண்டனிக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்றும், நீச்சல் தெரியாததால் அவர் கீழே விழுந்து அவருடைய முகங்கள் எல்லாம் சேதம் ஆகிவிட்டது என்றும் தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வந்தன.
மேலும் அவர் கோலாலம்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் எனவும் கூறப்பட்டது. முகத்தில் ஏற்பட்ட காயங்களால் பற்கள் உடைந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய இருப்பதாகவும் வதந்திகள் பரவத் தொடங்கின. இயக்குனர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பி விட்டதாகவும், இரண்டு வாரங்கள் மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதாகவும் கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனக்கு நடந்த விபத்து குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. அதில் அவர், “அன்பு நண்பர்களே, மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட பலத்த காயத்தில் இருந்து நான் பத்திரமாக மீட்கப்பட்டேன். அறுவை சிகிச்சை முடிந்துள்ளது, கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். எனது உடல்நிலையில் உங்கள் ஆதரவுக்கும் அக்கறைக்கும் நன்றி” என்று பதிவிட்டு இருக்கிறார். அவர் விரைந்து குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.