'2.30 மணிநேரத்துக்கு மேல.. படம் எடுத்தா பாம்பு (கோப்ரா) கூட தோத்துரும்'.. தளபதி விஜய் speech வீடியோ வைரல் !
பிரபல முன்னணி நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் நடிகர் மட்டுமல்லாது டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் பாடகராகவும் பணியாற்றியுள்ளார். காசி, ஜெமினி, பிதாமகன், அந்நியன், ஐ போன்ற திரைப்படங்கள் இவருக்கு மைல்கல்லாக அமைந்தது.
நடிப்பிற்காக தனது உடல்நிலையும் பொருட்படுத்தாது, தன்னை வருத்தி தனக்கான கதாபாத்திரத்தில் நேர்த்தி கொடுப்பவர். தற்போது நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன், கோப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்து உள்ளார்.
2019ம் ஆண்டு கடாரம் கொண்டான் திரைப்படத்திற்கு பின்னர் மஹான் திரைப்படத்தில் விக்ரம் நடித்திருந்தார். ஆனால், அப்படமும் OTT தளத்தில் ரிலீஸ் ஆன நிலையில், அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் விக்ரமின் நடிப்பை பார்க்க பெரும் ஆர்வத்தில் இருந்தனர்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் கோப்ரா. இவர் ஏற்கனவே 2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’, 2018ம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் கோப்ரா படத்தை இயக்குவதால் இப்படத்தின் மீது ஆர்வம் அதிகரித்தது.
கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி, இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க லலித் குமார் தயாரித்துள்ளார்.
கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது. இப்படம் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நடிகர் விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. அதற்கு காரணம் அப்படத்தின் நீளம் தான்.
பொதுவாக படங்கள் 2.30 மணிநேரத்திற்கு எடுக்கப்படும், ஆனால் இப்படம் 3 மணிநேரத்திற்கு மேல் எடுக்கப்பட்டிருந்ததால் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. இதனால் படம் பார்ப்பவர்கள் எல்லாம் ஏன் இவ்வளவு நீளமான படம் எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, படத்தில் இருந்து 20 நிமிட காட்சிகள் கட் செய்யப்பட்டு, நேற்று மாலை முதல் திரையிடப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 2.30 மணிநேரத்துக்கு மேல் படம் எடுத்தால் நல்ல படமாகவே இருந்தாலும் தோல்வி அடைந்துவிடும் என நடிகர் விஜய், பல ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் கூறி இருப்பதாவது : ”இன்றைக்கு இருக்கும் புது இயக்குனர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். அவங்களோட எல்லா படமும் நான் பாக்குறேன். புது புது ஐடியாவோட நல்ல நல்ல படங்கள் பண்றாங்க.
ஆனா, 2.30 மணிநேரத்துக்குள்ள உங்க கதைய சொல்லி முடிச்சிடுங்க. அதுக்குமேல போச்சுனா, படம் நல்லாவே இருந்தாலும் ஆடியன்ஸ் படத்தை பார்க்குறதுக்கு பதிலா அவங்க வாட்ச்ச பாக்க ஆரம்பிச்சிடுவாங்க. ரொம்ப நேரம் படம் எடுத்தா பாம்பு கூட கீரி கிட்ட தோத்துப்போகும்” என அவர் பேசியது தற்போது கோப்ரா படத்துக்கு அப்படியே பொருந்தும் விதமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அன்றே கணித்தார் விஜய் என குறிப்பிட்டு அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
#ThalapathyVijay about film duration 🌟pic.twitter.com/FMIrAdfLu4
— Laxmi Kanth (@iammoviebuff005) August 31, 2022