சுஷாந்த் சிங்ங் மரணம்.. தற்கொலை அல்ல கொலை - போஸ்ட் மார்ட்டம் செய்த நபர் அதிர்ச்சி பேட்டி
தொலைக்காட்சி சீரியல் தொடர்கள் மூலம் நடிக்கத் தொடங்கியவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். பல பிரபல ஹிந்தி மொழி சீரியல் தொடர்களில் நடித்துள்ள இவர், மக்கள் வரவேற்பால் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். கடந்த 2016ம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் தோனி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்து இந்திய திரையுலகில் பிரபலம் அடைந்தார்.
M.S. Dhoni: The Untold Story என்னும் அப்படத்தின் மூலம் மிக பேமஸ் ஆனார். அதனைத் தொடர்ந்து, இவரது Dil Bechara திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் யாரும் எதிர்பார்க்காத நிலையில், மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் பாலிவுட்டை உலுக்கியது.
அவர் மரணமடைந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது புரியாத புதிராகவே உள்ளது. அவரது மரணம் தொடர்பாக விசாரணை ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், தற்போது சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்த ரூப்குமார் என்பவர் சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து ரூப்குமார் கூறுகையில், “சுஷாந்த் சிங் இறந்தபோது, 5 உடல்கள் மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டன. அதில் ஒன்று விஐபி சடலம் என்றனர். பிரேத பரிசோதனைக்கு சென்றபோது தான் அது சுஷாந்த் சிங்கின் உடல் என்பது தெரிய வந்தது.
அவரது உடலில் பல அடையாளங்கள் மற்றும் கழுத்தில் இரண்டு முதல் மூன்று இடங்களில் காயங்கள் இருந்தன. உடற்கூராய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் உயர் அதிகாரிகள் புகைப்படங்கள் மட்டும் எடுக்கச் சொன்னார்கள். அதனால் நாங்களும் அப்படியே செய்தோம். சுஷாந்தின் உடலை பார்த்ததும், இது தற்கொலை அல்ல, கொலை என்று என்னுடைய சீனியர்களிடம் சொன்னேன்.
ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் போட்டோ மட்டும் எடு என சொன்னார்கள். பின்னர் உடலை போலீஸிடம் ஒப்படைத்தோம்” என அவர் கூறினார். இந்த தகவல்களால் தற்போது சுஷாந்த் சிங் மரணம் குறித்த விவாதம் பாலிவுட்டில் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.