விருமன் பட பிரபலத்தை கௌரவிக்காத சூர்யா & கார்த்தி.. மேடையிலே தைரியமாக சொன்ன பிரபலம்
தஞ்சாவூரில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சினேகன். பாடலாசிரியர் வைரமுத்து அவர்களிடம் 5 வருடங்கள் பணியாற்றிய இவர், நாளிதழ், மாத இதழ் போன்றவற்றில் பணியாற்றியுள்ளார். இவர் பாண்டவர் பூமி என்னும் பிரபல திரைப்படத்தில் அவரவர் வாழ்க்கையில் என்னும் பாடல் மூலம் பிரபலம் அடைந்தவர்.
இதனைத் தொடர்ந்து, ஆடாத ஆட்டமெல்லாம், ஆராரிராரோ, கல்யாணம் தான் கட்டிக்கிட்டு போன்ற பிரபல பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார். இப்படி சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் 2500க்கும் மேலான பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார்.
இவருக்கு பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதன் மூலம் இன்னும் பிரபலம் அடைந்தார். இவர் தற்போது, இயக்குனர் முத்தையா-கார்த்தி கூட்டணியில் உருவாகியிருக்கும் விருமன் திரைப்படத்தில் பாடல்களுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விருமன். இப்படத்தை, சூர்யா - ஜோதிகாவின் சொந்த நிறுவனமான 2D Entertainment தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன், இந்தப் படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் மதுரையில் கலந்து கொண்டனர். ஆனால் படத்தின் பாடலாசிரியர் சினேகன்க்கு எந்த ஒரு அழைப்பும் கொடுக்கவில்லை. இதனை வேறு ஒரு படத்தின் வெளியீட்டின்போது சினேகன் வெளிப்படையாக கூறி இருந்தார்.
மேலும் பாடலாசிரியருக்கான மரியாதை யாரும் கொடுப்பதில்லை. நாங்களும் படத்தில் பணியாற்றி உள்ளோம். எங்களுக்கான அங்கீகாரம் யாரும் கொடுப்பதில்லை. பெரிய நட்சத்திரம் உட்பட அனைவரும் இப்படித்தான் நடந்து கொள்கின்றனர் என விருமன் படக்குழு அவமானப்படுத்தியதாக சினேகன் மறைமுகமாக கூறினார்.
இந்நிலையில், தற்போது சென்னையில் விருமன் படத்தின் பிரஸ்மீட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது பேசிய சினேகன் அன்று சூர்யா, கார்த்தி அழைப்பு கொடுக்கவில்லை. ஆனால் இன்று தன்னை கலந்துகொள்வதற்கான அழைப்பை கொடுத்துள்ளார்கள். தனக்கு சந்தோஷமாக இருப்பதாக குத்தி பேசியிருக்கிறார்.
தற்போது அழைப்பு வந்தும் என்னால் கலந்து கொள்ள முடியாத சூழலில் தான் இருந்தேன். ஆனால் கலந்து கொள்ளாமல் இருந்தால் சினேகன் கோபமாக இருக்கிறார் என மீடியாவில் பேசப்படும் என்பதற்காக கலந்து கொண்டேன் என விருமன் பிரஸ்மீட்டில் தெரிவித்துள்ளார்.