'காலை'ல பாருங்க.. அந்த மரத்துல என் பிணம் தொங்கும்'.. 'வாலி' ஷூட்டிங்கில் தற்கொலை செய்துகொள்வேன் என அதிர வைத்த SJ சூர்யா?
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை கொண்டு தமிழ் திரையுலகில் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. பிரபல இயக்குனர்கள் பாக்யராஜ், வசந்த், சபாபதி உள்ளிட்டோருக்கு அசிஸ்டென்ட் ஆக பணியாற்றிய இவர், வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
தனது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்து, திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். அதனைத் தொடர்ந்து, விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் குஷி படத்தை இயக்கினார். இப்படமும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்னர், நியூ படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
கடந்த 5 வருடங்களாக, சிறந்த கதையாக இருந்தால் வில்லன் கதாபாத்திரத்திலும் ஏற்று நடித்து வருகிறார். இறைவி, ஸ்பைடர், மெர்சல், நெஞ்சம் மறப்பதில்லை, மாநாடு போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, விஜய்யின் வாரிசு படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் இயக்கிய முதல் படமான ‘வாலி’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது, தற்கொலை முடிவை எடுத்ததாக, யாருக்கும் தெரியாத அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வசந்த் இயக்கிய ‘ஆசை’ படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய போது, தன்னிடம் அன்பாக பழகிய அஜித்தை வைத்து படம் இயக்க நினைத்த எஸ்.ஜே.சூர்யா அஜித்திடம் ‘வாலி’ பட கதையை கூற, அஜித்தும் ஓகே சொல்லிவிட்டார்.
அஜித் ஹீரோ என்பதால், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். மேலும் அஜித்துக்கு ஜோடியாக அப்போது ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த, சிம்ரனை ஒப்பந்தம் செய்தார். இரண்டாவது ஹீரோயினாக ஜோதிகாவும், காமெடியனாக விவேக் உள்ள பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். அஜித் இரட்டை வேடத்தில் நடித்த இந்த படம் 1999ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில், இந்த படம் குறித்து பலருக்கும் தெரியாத தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதாவது இந்த படத்தின் முதல் நாள் ஷூட்டிங் அடையாறு போட்ஹவுஸில் நடத்த திட்டமிட்டிருந்தாராம் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் திடீரென அந்த வீட்டின் உரிமையாளர் தன்னுடைய வீட்டிற்கு சில முக்கிய உறவினர்கள் வர உள்ளனர். எனவே படப்பிடிப்பை மற்றொரு நாள் வைத்து கொள்ளுங்கள் என எஸ்.ஜே.சூர்யாவிடம் கூறியுள்ளார். இந்த செய்தியால் எஸ்.ஜே.சூர்யா அதிர்ச்சியாகி உள்ளார்.
காரணம், சினிமாவை பொறுத்தவரை ஆரம்பமே ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் அபசகுனம் என கூறி, சில தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் ரிஜெக்ட் செய்துவிடுவார்கள். இதனால் மிகவும் பயந்து போன எஸ்.ஜே.சூர்யா இது என்னுடை முதல் படம் சார், இந்த படத்திற்காக பல நாள் உழைத்திருக்கிறேன் என தான் பட்டகஷ்டங்களை கூறியுள்ளார். ஆனால், அந்த வீட்டின் உரிமையாளர் தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே, ஒரு கட்டத்தில் கண் கலங்கியபடி, சரி சார் நீங்க வீடு தரவேண்டாம், நாளை காலை உங்க வீட்டு ஜன்னல் வழியாக பாருங்கள் அந்த மரத்தில் என் பிணம் தொங்கும் என கூறியுள்ளார். பின்னர் எஸ்.ஏ.சூர்யாவின் நிலைமையை புரிந்து கொண்ட அந்த வீட்டின் உரிமையாளர், வேறு எதோ ஏற்பாடுகள் செய்து வீட்டை சொன்ன படி படப்பிடிப்புக்கு கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.