'ஷகீலா இந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடாது'.. நிகழ்ச்சியை நிறுத்திய படக்குழு.. ஷகீலாவின் பதில்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழியில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஷகீலா. இவர் “ப்ளே கேள்ஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகினார். பின்னர் இவர் நடித்திருந்த “கிணரத்தும்பிகள்” என்ற மலையாள திரைப்படம் பெரிய ஹிட் அடிக்கவே பல திரைப்படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இவர் கவர்ச்சி திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமானார் என்றாலும் காமெடி மற்றும் சில செண்டிமெண்ட் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அப்போதெல்லாம் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்கள் வெளியாகும் அதே நேரத்தில் நடிகை ஷகீலாவின் படங்களும் வெளியாகி பெரிய வசூலை பெற்று வந்தது. இதனால் கோவமடைந்த நடிகர்கள் சங்கம் முக்கியமான தினங்களில் இவரது படங்கள் வெளியாவதற்கு தடை விதித்தது.
கடந்த சில வருடங்களாக தமிழ் மற்றும் தெங்கு சினிமாவில் நடித்து வந்த ஷகீலா தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் களமிறங்கியுள்ளார். 2014ம் ஆண்டு கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷகீலா அதன் பின்னர் மலையாளம், தமிழ், தெலுங்கு என பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இதில் தமிழில் விஜய் டிவியில் நடத்தப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் மிக பிரபலம் அடைந்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் யாரும் பார்க்காத நடிகை ஷகீலாவின் மற்றொரு குணம் வெளியாகி மக்களுக்கு இவர் மீதான பார்வை அப்படியே மாறியது. குக் வித் கோமாளி சீசன் 2வில் ஷகீலா இரண்டாவது போட்டியாளராக வெற்றி பெற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஷகீலா பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதுபோக தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் ஆங்கராகவும் பணியாற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு காங்கிரசு கட்சியில் மனித உரிமை துறையின் மாநில பொதுச்செயலாளராக இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியிருக்கும் நிலையில் “ஓமர் லூலுவின் நல்ல சமயம்” என்ற மலையாள திரைப்படத்தின் தொடக்க விழா இன்று கேரளா கோழிக்கோடில் நடக்கவிருந்தது. மேலும் அதில் பங்கேற்க நடிகை ஷகீலா செல்வதாக இருந்தது. ஆனால் அந்த விழாவில் திடீரென ஷகீலா கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.
இதனால் நடிகை ஷகீலா வந்தால் தான் நிகழ்ச்சி நடக்கும் என்று படக்குழு கூறி நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தியானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து நடிகை ஷகிலா கூறுகையில், “இது எனக்குப் புதிதல்ல. இதுபோன்று அவமானங்களை பலமுறை சந்தித்து இருக்கிறேன். ஆனால், என்னை ஏற்கமறுப்பது ஏன் என்பதுதான் புரியவில்லை” என்றார். இதற்கு வணிக வளாகம், பாதுகாப்பு காரணங்களுக்காகவே அப்படிச் செய்யப்பட்டது” என விளக்கம் அளித்துள்ளனர்.