'இந்தியா சார்பாக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்' கண்கலங்க வைக்கும் வசனங்கள்.. ராக்கெட்ரி - MasterPiece
ஒரு காலத்தில் பேவரைட் க்ரஷ், சாக்லேட் பாயாக இருந்தவர் நடிகர் மாதவன். தற்போது அவ்வளவு திரைப்படங்களில் நடிக்காத மாதவன், முதல் முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்து இயக்கியுள்ள திரைப்படம் தான் ‘ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்’.
இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாக வைத்து எடுத்துள்ள படம் தான் இது. நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
கான்ஸ் திரைப்பட விழாவில் மாதவனின் ராக்கெட்டரி திரைப்படத்தை இந்திய அரசு சார்பில் World Premiere ஆக ரிலீஸ் செய்தனர். கடந்த சம்மருக்கே வெளியாகவிருந்த ராக்கெட்ரி-தி நம்பி எஃபெக்ட் திரைப்படம், கொரோனா காரணமாக தள்ளிப் போன நிலையில், இன்று ஜூலை 1ம் தேதி இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் சார்பில் உலகமெங்கும் ரசிகர்களுக்காக ராக்கெட்டரி திரைப்படம் தியேட்டரில் வெளியானது.
கமர்ஷியல் சமரசங்கள் இல்லாமல், ஒரு ப்யூர் பயோபிக்கை கொடுத்தே ரசிகர்களை கவர்ந்திழுக்க முடியும் என்பதை சாதித்து காட்டி இருக்கிறார் இயக்குனர். ராக்கெட்ரி படத்தின் முழு விமர்சனம் இதோ ..
பெரிய சம்பளத்துக்கு நாசா வேலைக்கு அழைக்க தனது குருநாதர் விக்ரம் சாராபாயின் கோரிக்கையை ஏற்று இஸ்ரோவில் வேலை பார்க்கிறார் நம்பி நாராயணன் (மாதவன்). விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அசுர வளர்ச்சியை எட்ட வேண்டிய ஆர்வத்தில் இருக்கும் நேரத்தில் இவரது உழைப்பு அளப்பறியதாக பார்க்கப்படுகிறது.
திடவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், திரவ எரிபொருள் (liquid fuel) கொண்டும் ராக்கெட்டை அதிக தூரம் செலுத்த முடியும் என்று சாதித்துக் காட்டிய விஞ்ஞானி, ஒரு கட்டத்தில் விகாஸ் என்ஜினையும் இந்தியாவுக்காக கண்டுபிடிக்கிறார். நாடே அவரை கொண்டாட வேண்டிய நிலையில், அதிரடியாக தேச துரோக வழக்கில் கைது செய்யப்படும் அவர் அதிலிருந்து எப்படி சுய போராட்டம் நடத்தி மீண்டார் என்பது தான் ராக்கெட்ரி படத்தின் கதை.
ஹீரோவாகவும் இயக்குநராகவும் மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார் மாதவன். குறைந்த செலவில் ராக்கெட் என்ஜினை செய்ய வேண்டும் என்கிற சூழலில் தனது விஞ்ஞானிகள் குழுவை பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் சென்று அங்கே உள்ள ராக்கெட் என்ஜின் தொழில் நுட்பத்தை அந்நாட்டவர்க்கே தெரியாமல் கற்றுக் கொண்டு வரும் காட்சிகளில் எல்லாம் மாதவனுக்கு பதிலாக திரையில் இளம் வயது நம்பி நாராயணன் தான் தெரிகிறார்.
இவருக்கு எதிராக மரியம் எனும் பெண் தேச துரோக வழக்கை பதிவு செய்ய போலீசார் இவரை கைது செய்து 3ம் டிகிரி ட்ரீட்மெண்ட்டை கொடுக்கும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை தியேட்டரில் நிச்சயம் கண் கலங்க வைத்து விடும்.
சூர்யாவின் பேட்டி மூலம் தான் ஒட்டுமொத்த தனது வாழ்க்கையின் கதையையும் நம்பி நாராயணன் சொல்வது போல இந்த படம் உருவாகி உள்ளது. நம்பி நாராயணனின் கதையைக் கேட்டு அவர் முன் மண்டிப் போட்டு இந்திய தேசத்தின் சார்பாக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என சூர்யா பேசும் இடம் அருமை. கிளைமேக்ஸில் ரியல் நம்பி நாராயணனை அழகாக கொண்டு வந்து பொருத்தியிருப்பார் இயக்குநர் மாதவன்.
மாதவனின் இயக்கம், மாதவனின் நடிப்பு, மாதவனின் வசனங்கள் படத்திற்கு பெரிய பிளஸ் ஆக உள்ளது. ஒரு நாயை கொல்ல நினைத்தால் அதற்கு வெறிநாய் என பெயர் வைத்தாலே போதும் என்றும் ஒரு மனிதனை கொல்ல தேசதுரோகி பட்டம் போதும் என பேசும் வசனம், 30 ஆண்டுகால சட்டப் போரட்டத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றம் நிரபராதி என நம்பி நாராயணனை விடுவித்த நிலையில், படம் முழுக்கவே சூர்யா பேட்டி எடுக்க இவர் தனது கதையை சொல்லும் விதமாகவே அமைந்திருக்கும்.
நான் குற்றவாளி இல்லைன்னா அப்போ யார் குற்றவாளி எனக் கேட்கும் இடம் எல்லாம் நம் நாட்டில் அடுத்தவனின் வளர்ச்சி பிடிக்காமல் அவனை வீழ்த்தி விட வேண்டும் என நினைக்கும் கொடூரமான மனங்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்வியாகவே அமைந்திருக்கும். சிபிஐ அதிகாரியாக வரும் கார்த்திக் குமார், இளம் வயது அப்துல் கலாம் காட்சிகள் என படத்தில் பல பிளஸ்கள் உள்ளன.
கமர்ஷியல் மசாலா காட்சிகள் விரும்பும் ஆடியன்ஸை எந்த அளவுக்கு இந்த படம் ஈர்க்கும் என்பது தெரியவில்லை. அதே போல, படத்தில் பயன்படுத்தப்படும் ராக்கெட் சயின்ஸ் சாதாரண ஆடியன்ஸுக்கு எந்தளவுக்கு கனெக்ட் ஆகும் என தெரியல. நம்பி நாராயணன் எனும் மாபெரும் விஞ்ஞானி தன் வாழ்க்கையையே தொலைத்தது எப்படி என்பதை உணர்ச்சி பூர்வமாக எந்தவொரு சொதப்பலும் இல்லாமல் சொல்லியதற்காகவும் நிச்சயம் தியேட்டரில் கொண்டாடப்பட வேண்டிய படம் தான் இந்த ராக்கெட்ரி !