'நான் அவன் இல்லை.. யாரோ மார்ஃபிங் செஞ்சுட்டாங்க..' நிர்வாண போட்டோஷூட் விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த ரன்வீர் சிங் !
2010ம் ஆண்டு Band Baaja Baaraat என்னும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ரன்வீர் சிங். இதனைத் தொடர்ந்து, Ladies vs Ricky Bahl, Lootera, Goliyon Ki Raasleela Ram-Leela என பல பிரபல பாலிவுட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். வெகு சில திரைப்படங்களிலேயே முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்றார்.
2018ம் ஆண்டு பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே அவர்களை காதல் திருமணம் செய்துகொண்டார். ஏராளமான படங்களில் நடித்து வரும் ரன்வீர் சிங், நடிப்பை தாண்டி மாடலிங் துறையிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருபவர்.
வித்தியாசமான ஆடைகள் அணிவது, ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது என தனித்துவமாக விளங்கும் இவர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் இவர் நடத்திய நிர்வாண போட்டோஷூட் ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகினரையும் ஷாக் செய்தது.
மறைந்த அமெரிக்க நடிகர் பெர்ண்ட் ரெனால்ட்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரை போலவே ரன்வீர் இந்த போட்டோஷூட்டை நடத்தி நாளிதழ் ஒன்றிற்காக ஆடை எதுவும் அணியாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார்.
அதன் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் பரவியது. அவரின் இந்த நிர்வாண போட்டோஷூட்டுக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. இதையடுத்து, சமூக ஆர்வலர் ஒருவர் மும்பையில் உள்ள செம்பூர் காவல்நிலையத்தில் ரன்வீர் சிங்கிற்கு எதிராக புகார் கொடுத்தார். அவரின் நிர்வாண போட்டோஷூட் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதால் அவரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ரன்வீர் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என போலீஸார் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து விசாரணைக்கு ஆஜரான ரன்வீர் சிங்கிடம் இந்த போட்டோஷூட்டின் பின்னணி என்ன என்பது குறித்து அடுக்கடுக்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவரிடம் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டு, அதில் அவர் அளித்த வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.
அந்த விசாரணையில் ரன்வீர் சிங் போலீஸிடம் என்ன சொன்னார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அந்த போட்டோக்களில் நிர்வாணமாக இருப்பது தான் இல்லை என்றும் அந்த போட்டோஸ் அனைத்தையும் யாரோ மார்ஃபிங் செய்து வெளியிட்டுள்ளனர் எனவும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார். அந்த புகைப்படங்களில் இருப்பது அவர் தான் என தெரிந்தும் போலீஸ் விசாரணையில் இப்படி அந்தர் பல்டி அடித்துள்ள ரன்வீரை பார்த்து, இது உலக மகா நடிப்புடா சாமி என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.