'இப்போல்லாம் பணம் இருக்குன்னு சில மூஞ்சிங்க படம் நடிக்க வந்துறாங்க..' ராதாரவி பரபரப்பு பேச்சு!
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் பார்த்த ரசிகர்கள், இப்படத்திற்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என பாராட்டி வந்தனர். படத்தின் முதல் 30 நிமிடங்கள் படத்தின் மேக்கிங் வீடியோ, அதற்கு பிறகு இன்டர்வெல் தொடர்ந்து, 96 நிமிடங்கள் Non linear Single shot ல் எடுக்கப்பட்ட திரைப்படம்.
50 வயதாகும் ஒருவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், அதன் இருண்ட பக்கங்களை திரும்பிப் பார்ப்பது தான் படத்தின் கதை. இதை த்ரில்லிங், சுவாரஸ்யம் கலந்து ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக சொல்லி இருக்கின்றார்களாம்.
இப்படம் உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. பார்த்திபன் இயக்கிய படங்களில் அதிகாலை காட்சி போடப்பட்ட முதல் படம் இரவின் நிழல் தான். ரசிகர்களிடம் இப்படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. படத்தை பார்த்த ரசிகர்கள் டுவிட்டர் வாயிலாக தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர்.
இப்படத்திற்காக பார்த்திபனுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருந்தனர். இவரது முந்தைய படைப்பான ஒத்த செருப்பு படத்தை மிஞ்சும் வகையில் இவர் தற்போது எடுத்த படம் இரவின் நிழல் படம் அமைந்துள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படம் வெளியானது முதல் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை ஏராளமானோர் இப்படத்தை பார்த்து வியந்து பாராட்டினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் இரவின் நிழல் திரைப்படத்தை பார்த்து, பார்த்திபன் இப்படத்தின் மூலம், தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என நிரூபித்துவிட்டதாக பாராட்டினார்.
இந்நிலையில், இரவின் நிழல் படத்தின் சக்சஸ் மீட் அண்மையில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் சிவா, தனஞ்செயன் மற்றும் நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய நடிகர் ராதா ரவி பார்த்திபனின் முயற்சியை பாராட்டி பேசினார்.
அவர் பேசியதாவது : “பார்த்திபன் மூஞ்சிய 2 மணிநேரம் தொடர்ந்து பார்க்க முடியுமா, ஆனா ஒத்த செருப்பு படத்துல பார்க்க வச்சான்ல, அதுதான் திறமை. இப்போலாம் பணம் இருக்குன்னு சில மூஞ்சிங்க நடிக்க வர்றாங்க. நான் சாபம் விட்டாலே அப்படி ஆகிடுவாங்க போல. விளம்பரத்துல ஆடுறத பார்த்தப்பவே இவன் நடிக்க வந்துருவான்னு சொன்னேன் ஒரு மேடைல. அதே மாதிரியே வந்துட்டான்யா” என பேசி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் லெஜண்ட் சரவணனைப் பற்றிதான் இவ்வாறு பேசியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.