'விஜய் சார் கிட்ட கதை சொல்லிருக்கேன்..' தளபதி ரசிகர்களுக்கு மறைமுகமாக அப்டேட் கொடுத்த பிரதீப்!
2019ம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கோமாளி. பள்ளி கூடத்தில் படிக்கும் போது எதிர்பாராத விபத்தில் சிக்கி கோமா வரை சென்று தனது வாழ்க்கையில் 16 வருடம் கோமாவில் இருந்து வெளியேறும் மனிதனுக்கு இந்த உலகம் எப்படி இருக்கும் என்பதனை சுவாரசியமாக சொல்லியிருப்பார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் திரைப்படமான கோமாளி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 76 கோடி வரை வசூல் செய்திருந்தது. தற்போது பிரதீப் இயக்கம் மற்றும் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் லவ் டுடே. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.
சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்துள்ளனர். நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாது இந்த காலத்து காதலை பிரதிபலிப்பதாக கூறியுள்ளனர்.
காதல் ஜோடி ஒருவருக்கு ஒருவர் போனை மாற்றிக்கொண்ட பின் நடக்கும் மோதல்களை நகைச்சுவை கலந்து சொல்லியுள்ள படம் தான் லவ் டுடே. முதல் பாதி முழுக்க காமெடி, இரண்டாம் பாதி முழுக்க எமோஷன் என பக்கா கமர்சியல் பேக்கேஜ் ஆக இப்படத்தை இயக்கியுள்ளார் பிரதீப். இன்றைய கால இளைஞர்களின் வாழ்வோடு ஒத்துபோகக்கூடிய கதை என்பதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், லவ் டுடே படத்தின் இயக்குனர் பிரதீப், நடிகர் விஜய்க்கு கதை சொன்னதாக ஒரு தகவல் பரவி வந்தது. அதுகுறித்து அவரிடமே சமீபத்திய பேட்டியில் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது :“விஜய் சாருக்கு கதை சொன்னது உண்மை தான். அதைப்பற்றி தற்போது பேசினால், லவ் டுடே படத்தின் புரமோஷனுக்காக பேசினேன் என நினைத்து விடுவார்கள். இப்படம் சக்சஸ்ஃபுல் ஆக ஓடி முடித்த பின்னர் அது பற்றி விரிவாக பேசுகிறேன்” என பிரதீப் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரதீப்பின் அடுத்த படம் விஜய் உடன் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணி கைகூடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.